பாரதிராஜாவின் ஆரம்பகாலத்தில் அவருடன் பயணித்தவர்களில் இளையராஜா, கமல், ரஜினி ஆகியோர். அவர்களில் அனைவருடனும் நல்ல உறவு வைத்திருந்தாலும், ரஜினியை மட்டும் பாரதிராஜா ஒவ்வொரு காலகட்டத்திலும் எதிர்த்துள்ளார் . அது ஏன்? மற்றவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டதும், ரஜினியுடன் பிரிவு ஏற்பட்டதும் ஏன், என பார்க்கலாம்.






 


பாரதிராஜாவும்-இளையராஜாவும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே நண்பர்கள். இருவருக்குமே சினிமாவில் வர வேண்டும் என்கிற கனவில் இருந்தவர்கள். நாடக கச்சேரிகளில் இணைந்து பணியாற்றியவர்கள். 


சுகாதாரத் துறையில் பணியாற்றிய பாரதிராஜா, தேனி பண்ணைபுரத்தில் பணியாற்றிய போது தான், பாவலர் சகோதரர்கள் எனப்படும் இளையராஜா உள்ளிட்ட சகோதரர்களின் நட்பு கிடைத்தது. சினிமாவில் இணைந்த பின் அவர் இணைந்து படம் செய்தாலும், இடையில் அவர்களுக்குள் கருத்து மோதல் வந்த போது, மாற்று இசையமைப்பாளர்களை பாரதிராஜா பயன்படுத்தியுள்ளார். 


கேப்டன் மகள் படத்தில் ஹம்சலேகா என்ற இசையமைப்பாளர், வேதம்புதிது படத்தில் தேவேந்திரன் என்ற இசையமைப்பாளர் ஆகியோருடன் வேலை செய்துள்ளார். கிழக்குச் சீமையிலே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்ய வைரமுத்து முக்கியமானவர். அதற்கு முன், ரோஜா, புதிய முகம் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வைரமுத்து தான் பாடல்கள் எழுதியிருந்தார். அந்த இரு படத்தின் பாடல்களையும் பாரதிராஜாவிடம் போட்டு காண்பித்தார் வைரமுத்து. 


ட்ரைவின் உட்லெண்ட் ஓட்டலில் வைத்து ஏ.ஆர்.ரஹ்மானை பாரதிராஜாவும், வைரமுத்துவும் சந்தித்தனர். கிராமத்து படங்களுக்கு அவரால் இசையை கொடுக்க முடியும் என்கிற சவால் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இருந்தது. அந்த சந்தேகத்தை அடித்து நொறுக்கினார் ஏ.ஆர்.ரஹ்மான். 


கமலுக்கும் பாராதிராஜாவுக்கும் இன்று வரை நல்ல நட்பு உள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். 16 வயதினிலே கதையை சொன்னதுமே கமலுக்கு பிடித்துவிட்டது. நல்ல மார்க்கெட்டில் இருந்த போது, கோவணம் கட்டி நடிக்க ஒப்புக் கொண்டார் கமல். அதன் பின் சிவப்பு ரோஜாக்கள் படத்திலும் அவர்கள் நன்கு இணைந்திருந்தனர். படங்களில் இப்போது பணியாற்றவில்லை என்றாலும், ஒருத்தருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வு உள்ளது. 






ரஜினிக்கும் பாரதிராஜாவுக்கு ஆரம்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. 16 வயதினிலே படத்தில் ரஜினிக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 2500 ரூபாய் தான். அதிலும் 500 ரூபாய் பாக்கி தரவில்லை என்கிறார்கள். 16 வயதினிலே படத்தில் ரஜினி கதாநாயகன் இல்லை என்றாலும், மக்கள் மனதில் பயங்கர இடம் பிடித்தார். அதன் பின் கொடி பறக்குது படத்திலும் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு பற்றி பாரதிராஜா கடும் விமர்சனம் வைத்தார். ஆனால் அது அவர்களின் நட்பை பாதிக்கவில்லை . ஆனாலும், ரஜினி-பாரதிராஜா இடையே ஏதோ ஒருவிதிமான மனக்கசப்பு இருந்திருக்கிறது. சமீபத்தில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‛பாரதிராஜா சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனால், என்னை பாரதிராஜா சாருக்கு பிடிக்காது. நீங்கள் வேண்டுமானால், பழைய வீடியோக்களை தேடி பாருங்கள், அவரிடம் என்னைப்பற்றி கேட்கும் போதெல்லாம், ‛அவர் நல்ல மனிதர்’ என்று கூறுவார். நல்ல நடிகர் என்று எப்போதும் கூறியதில்லை.’ என்று ரஜினி பகிரங்கமாகவே கூறியிருந்தார். ரஜினியை தமிழ்நாட்டுக்கு எதிரானவர் என்ற ஒரு தரப்பினர் குற்றச்சாட்டை முன்வைத்த போது, அதை ஆதரித்தவர் பாரதிராஜா என்பதும் குறிப்பிடித்தக்கது.