அது என்ன மாயமோ? மந்திரமோ தெரியலைங்க..அந்த சாப்பாடு அவ்வளவு ருசியா இருக்கும் என மூன்று தலைமுறைகளாக நடிகர் சிவாஜி கணேசன் வீட்டு சாப்பாட்டை பெருமையாக பேசாத பிரபலங்களே இல்லை. சமீபத்தில் கூட இயக்குநர் விக்னேஷ் சிவன் , பிரபுவுடன் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு , உங்க வீட்டு சாப்பாட மிஸ் பண்ண போறேன் சார் என பிரபுவிடம் கூறிய வீடியோவை பதிவிட்டிருந்தார். இன்முகத்தோடு வரவேற்று ,விருந்தோம்பல் செய்வதுதானே தமிழர் பண்பாடு , அதனை அடுத்தடுத்த தலைமுறைகளாக பின்பற்றி வருகின்றனர் நடிகர் திலகம் குடும்பத்தினர்.  சிவாஜி சார் வீட்டு சாப்பாடு கேரியரில்  என்னென்ன இருக்கும்  என்பது குறித்து நடிகரும் , பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு பகிர்ந்துள்ளார். 


 






நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் "கேரியர்ல சாப்பாடு நிறைய இருக்கும்..பொதுவாகவே சாப்பிடப்போறவங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத்தான் சமைத்து கொடுப்பாங்க. அது மீன் , ஆடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சிக்கன், மீன்குழம்பு  நிச்சயமா இருக்கும். சில நேரங்கள்ல முழுவதும் வெஜிடேரியனாகவும் இருக்கும். அது சாப்பிடறவங்கள பொருத்தது. ஆனால் எது கொடுத்தாலும் மனசார, அன்போட கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும். நானும் துல்கரும்தான் சாப்பாடு பார்ட்னர்ஸ். பெரும்பாலும் டயட்ல இருக்கதால சாப்பிட மாட்டோம் . ஆனால் சாப்பிட்டா இரண்டு பேரும் ஒன்னாதான் இருப்போம். நான் உதவி இயக்குநரா கேரளாவில் வேலை செய்துக்கொண்டிருந்த சமயங்கள்ல , பிரியாணி சாப்பிட்டு இதெல்லாம் ஒரு பிரியாணியாடா என சொன்னேன். உடனே துல்கர் வீட்டில் மூன்று விதமான பிரியாணி செய்து , ட்ரீட்டிற்கு கூப்பிட்டான்.  கேரளாவில் இருந்த சமயங்கள்ல கையேந்தி பவன்ல சாப்பிடுவேன்.





காலையில் கிடைக்கும் பரோட்டா கடலைக்கறிதான் ஃபேவரெட். தாத்தா (சிவாஜி ) சமைக்க மாட்டார். ஆனால் பாட்டி செம குக்.  தாத்தாவிற்கு வேண்டியத செஞ்சி கொடுப்பாங்க. குறிப்பா எண்ணை குறைவாக பயன்படுத்தி சமைப்பாங்க. அவங்க  ருசியான சமையலுக்கு ஈடா இன்னும் நான்  எதுவுமே சாப்பிட்டதில்லை.  நான் சமைப்பேன். சாண்டிகோல இருக்கும் பொழுது  அம்மாக்கிட்ட இருந்து ரெசிபி வாங்கி , எழுதிட்டு போய் சமைத்திருக்கேன். அப்போதெல்லாம் யூடியூப்ல சமையல் வீடியோஸ் இருக்காது.  எனக்கு பொதுவாக மூளை , ஈரல் , கிட்னி இது போன்ற தனித்தனி பார்ட்டாக சாப்பிட சுத்தமாக பிடிக்காது. நாம பொதுவாக பிறந்தநாள் ட்ரீட் கொடுத்தா சாப்பாட்டிற்கு அதிகமாக செலவாகும்.” என உணவு குறித்த பல சுவாரஸ்ய தகவல்களையும் இறுதியாக புரோட்டீன் மற்றும் கார்ப்ஸ் கலந்த உணவுகளை சாப்பிடுங்கள் என தனது ரசிகர்களுக்கு டிப்ஸும் கொடுத்துள்ளார் விக்ரம் பிரபு.