நடிகர் ஸ்ரீகாந்த் ஒரு காலத்தில், திரையுலகை கலக்கிய ஹாண்ட்சம் ஹீரோவாக இருந்த நிலையில், தற்போது போதை பொருள் பயன்படுத்திய வழக்கில், இவரை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
போதை மருந்து வழக்கில் சிக்கிய ஸ்ரீகாந்த்:
அதிமுக நிர்வாகி பிரசாந்த் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் நடிகர் ஸ்ரீகாந்த், போதை மருந்து வழக்கில் சிக்கி உள்ளார். இதை தொடர்ந்து நேற்று இவரிடம் போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்த போது, தன்னுடைய தவறை மறுக்காமல் ஒப்புக்கொண்ட ஸ்ரீகாந்த்... தவறு செய்து விட்டேன் என கதறி அழுத நிலையில், தன்னுடைய மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் குமுறியுள்ளார்.
மேலும் நீதிமன்றத்திலும் தன்னுடைய மகனை கவனித்துக் கொள்ள ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், "நீதிபதி இங்கு ஜாமின் கோர முடியாது என்றும், என் டி பி எஸ் சிறப்பு கோர்ட்டில் தான் ஜாமீன் பெற முடியும் எனக்கூறி அவரின் ஜாமீன் மனுவை நிராகரித்தது மட்டும் இன்றி, 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டது. அதேபோல் ஸ்ரீகாந்த் வைத்ததாக கூறிய போதைப்பொருள் பார்ட்டியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்கள் யார் யார் என்கிற விசாரணையையும் தற்போது போலீசார் துவங்கியுள்ளனர்.
ஸ்ரீகாந்த் மகனுக்கு என்ன ஆனது?
இது ஒரு புறம் இருந்தாலும், ரசிகர்களும் - நெட்டிசன்களும் நடிகர் ஸ்ரீகாந்தியின் மகனுக்கு என்ன ஆனது? என தொடர்ந்து கேள்வி எழுப்ப துவங்கி உள்ளனர். அதாவது அவர் தற்போது உடல்நலன் குன்றி உள்ளதால் அவரை பார்த்து கொள்ளவே, ஸ்ரீகாந்த் இந்த ஜாமீன் கேட்டதாக தெரிகிறது. அதே நேரம் அவருக்கு என்ன பிரச்சனை என்கிற முழுமையான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் ஸ்ரீகாந்தியின் மனைவி வந்தனா பிரபல தொழிலதிபரின் மகள். அவருக்கு சொந்தமாக கல்லூரி உட்பட சில நிறுவனங்கள் உள்ளது.
அதை அவர் கவனித்து கொள்வதால், ஸ்ரீகாந்த் தான் தன்னுடைய பிள்ளைகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போது மகனை பார்த்து கொள்ளும் கடமை தனக்கு இருப்பதாக ஸ்ரீகாந்த் கூறியதாக தெரிகிறது.
ஸ்ரீகாந்த் - வந்தனா சர்ச்சை திருமணம்:
நடிகர் ஸ்ரீகாந்தின் தந்தை ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். தாய் கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஸ்ரீகாந்தின் தந்தை பாரத ஸ்டேட் பேங்கில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஸ்ரீகாந்த் குறிப்பிட்ட வயதை எட்டிய பின்னர், தனக்கான செலவுகளை தானே பார்த்து கொள்ளவேண்டும் என, ஹோட்டலில் சர்வர் வேலை முதல்கொண்டு செய்து, மாடலிங் துறையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
சினிமா வாய்ப்புகளை பெற கடினமாக உழைத்த ஸ்ரீகாந்த், அதில் வெற்றியும் கண்டார். முதல் படத்திலேயே பல இளம் ரசிகர்களின் கனவு கண்ணனாக மாறிய ஸ்ரீகாந்த், அடுத்தடுத்து தேர்வு செய்த படங்களும் இவரை வளர்ந்து வரும் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இடம்பிடிக்க செய்தது.
இந்த நிலையில் தான் ஸ்ரீகாந்துக்கு ஆஸ்திரேலிவில் படித்த MBA பட்டதாரியான வந்தனாவுடன் காதல் ஏற்பட்டு, அவரை ரகசியமாக திருமணம் செய்து, மூன்று மாதம் அவருடன் குடும்பம் நடத்தி விட்டு, கழட்டி விட பார்த்த நிலையில்... வந்தனா ஸ்ரீகாந்த் வீட்டின் முன்பு போராட்டத்தில் குதித்தார். ஸ்ரீகாந்தை தன்னை திருமணம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் வடபழனி காவல் நிலையத்தில் சமர்ப்பித்து அவர் மீது புகார் கொடுத்தார்.
இந்த புகார் மனுவில் வந்தனா கூறி இருந்தாவது, "நடிகர் ஸ்ரீகாந்தை தனது தோழியும் - நடிகை நடிகையுமான ஒருவர் மூலம் தான் பார்ட்டிக்கு வந்த போது தெரியும். அதன் பிறகு கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த ஸ்ரீகாந்தின் பிறந்தநாள் பார்ட்டிக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் நான் கலந்து கொண்ட போது, ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் பழக துவங்கினோம். ஒரு கட்டத்தில் ஸ்ரீகாந்த், இருவரும் திருமணம் செய்து கொள்வோம் எனக் கூறினார். என்னுடைய பெற்றோர் ஆரம்பத்தில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும், என்னுடைய பிடிவாதத்தின் காரணமாக ஸ்ரீகாந்தை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
இதை எடுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு, ஸ்ரீகாந்த் நடித்து வந்த தெலுங்கு படத்தின் தயாரிப்பாளர் கோடீஸ்வரர்ராவின் மனைவி கீதாவின் குடும்ப ஜோதிடர் ஒருவரை சந்திக்க நானும் ஸ்ரீகாந்தும் சென்றோம். அப்போது ஸ்ரீகாந்த் திடீரென அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வோம் என்றார். நான் என்னுடைய பெற்றோரை அங்கு வர சொன்னேன். அந்த ஜோதிடர் முன்னிலையிலேயே வேணுகோபால் சுவாமி கோவிலில் எங்களுடைய திருமணம் மிக எளிமையாக நடந்து முடிந்தது. திருமணத்தை முறையாக ஹைதராபாதிலும் பதிவு செய்தோம். திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் வரை சென்னையில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டில் என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி விட்டு, என் மீது உள்ள ஒரு வழக்கை காரணம் காட்டி என்னை விட்டு பிரிந்து போக முயற்சி செய்வதாக தெரிவித்திருந்தார்.
இந்த பிரச்சனைக்கு பின்னர் ஸ்ரீகாந்த் மார்க்கெட் சரசரவென சரிய துவங்கியது. இந்த பிரச்சனைக்கு பின்னர் ஸ்ரீகாந்த் தன்னுடைய பெற்றோர் சம்மதத்துடன் மீண்டும் வந்தனாவை கரம் பிடித்தார். தற்போது ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனா ஜோடிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த் தன்னை மீண்டும் திரையுலகில் நிரூபிக்க அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வந்தாலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு வெற்றி படத்தை கூட கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.