கடந்த 1984ஆம் ஆண்டு நிகழ்ந்த சீக்கியர் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ஜோகி. பாடகரும் நடிகருமான தில்ஜித் தோசன்ஜ் நடிப்பில் வெளியாக உள்ள இத்திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது. படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ள தில்ஜித், 1984இல் நடந்ததை இனப்படுகொலை என்றுதான் குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.


அக்டோபர் 31, 1984 அன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து டெல்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வன்முறை வெடித்தது. அதில், இந்தியா முழுவதும் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டெல்லியில்தான் அதிகம் பேர் கொல்லப்பட்டனர்.


இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள தில்ஜித், "அதை கலவரம் என்று சொல்லக்கூடாது. இனப்படுகொலை என்பதே சரியான வார்த்தை. மக்களுக்குள் இருதரப்புக்கிடையே சண்டை வந்தால், அது கலவரம். என்னைப் பொருத்தவரை இதை இனப்படுகொலை என்றே சொல்ல வேண்டும். இது ஒரு சிலருக்கு நடந்தது என்பதல்ல. 


இது எங்கள் அனைவருடனும் கூட்டாக நடந்தது என்பது எனக்குத் தெரியும். நான் சில சம்பவங்களைப் பற்றி பேசினால், அது தனிப்பட்டதாக இருக்கும். படத்தில் கூட்டாகப் பேசுகிறோம். நான் பிறந்ததில் இருந்தே அதை பற்றி கேள்விப்பட்டு வருகிறேன். இன்னும் அதனுடனேயே வாழ்ந்து வருகிறோம். படத்தில் நடித்தது எனக்கு உணர்வுப்பூர்வமான அனுபவத்தை தந்தது.


நாம் அனைவரும் நிறைய கதைகளைக் கேட்டிருப்போம். வாழ்க்கையில் இதுபோன்ற ஏதாவது நடக்கும் என்று நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால், எதுவும் நடக்கலாம். இது புதிய கதையல்ல. நாம் கேட்டு வளர்ந்த விஷயங்களையே இந்தப் படமும் பேசுகிறது. பாசிட்டிவிட்டியை பரப்புவதே எனது முயற்சி.


வரலாற்றைப் பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது நாம் இலகுவான, வேடிக்கையான திரைப்படங்களை உருவாக்கும் ஒரு ஊடகம். ஆனால், வரலாற்றில் இருந்தும் இதுபோன்ற விஷயங்களில் திரைப்படம் எடுக்க வேண்டும்" என்றார். அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கிய ஜோகி, இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள சீக்கிய சமூகம் எதிர்கொண்ட வன்முறையை பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டது.


தோசஞ்ச், முகமது ஜீஷன் அய்யூப் மற்றும் ஹிட்டன் தேஜ்வானி ஆகிய மூன்று நண்பர்களின் உணர்வுப்பூர்வமான பயணம் பரபரப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று Netflix-இல் வெளியாக உள்ளது. ஜாபர் ஹிமான்ஷு கிஷன், மெஹ்ராவுடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். குமுத் மிஸ்ரா மற்றும் அமிரா தஸ்தூர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


சீக்கியர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தில்ஜித், கங்கனா ரனாவத்தின் கருத்துகளுக்கு பல முறை பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.