பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க... மோகன்பாபுவை சந்தித்த ரஜினி; இதுதான் நட்புன்னு நெகிழ்ந்த மகள்

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் மட்டும் ’பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க’ என வாயசைத்தார் என நினைக்க வேண்டாம். நிஜத்திலும் அவர் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் தான். திரைத்துறையிலும் அவருக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் தொடங்கி நம் ஊர் நடராஜ் வரை அவருக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அந்தவகையில் அவர் அவ்வப்போது தனது நெருங்கிய நண்பர்களை சந்திப்பார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவலால் இந்த சந்திப்புகள் பெருமளவில் நடைபெறவில்லை.



 

இருப்பினும், அண்மையில் ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பின்போது தனது நீண்ட கால நண்பரும் தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான மோகன்பாபுவை ரஜினிகாந்த் சந்தித்திருக்கிறார். அப்போது நடந்த போட்டோஷூட் புகைப்படங்களை மோகன்பாபுவின் மகள் லக்‌ஷ்மி மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர, அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சுவும் சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவர் அந்தப் படங்களை சும்மா பகிரவில்லை. அதற்கு ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ் (original gangsters) என்று தலைப்பிட்டுப் பகிர்ந்திருந்தார். இது போதாதா இரு ஸ்டார்களின் விசிறிகளும் இணையத்தில் கசிந்துருகி கமென்ட் செய்துகொண்டிருக்கின்றனர்.

 

ரசிகர்கள் தான் கசிந்துருகுகின்றனர் என்றால், நட்பின் வலிமை குறித்து மோகன்பாபுவின் மகள் லக்‌ஷ்மி மஞ்சுவும் நீண்ட பதிவை இட்டிருக்கிறார். நீண்டகால நட்புக்கான நம்பிக்கை..

லக்‌ஷ்மி மஞ்சு பதிவு செய்த ட்வீட்டில்,  "இத்தனை ஆண்டுகளில் நட்பு குறித்து எனக்குக் கிடைத்த அர்த்தம் வேறு. நம்முடன் நீண்ட காலமாகவே நண்பர்களாகவே வளர்ந்தவர்கள் இப்போது நம் நண்பர்களாக இல்லாமல் போகலாம். ஆனால், நம் வாழ்க்கையில் திடீரென எங்கோ சந்திக்கும் நபர்கள் இன்றுவரை நண்பர்களாக இருப்பர். 



ஆனால், இவர்கள் இருவரையும் பார்க்கும்போது நீண்டகால நட்புக்கான நம்பிக்கை எனக்குக் கிடைக்கிறது.

ஏனெனில் இவர்கள் இருவருமே ஒரு கோப்பை தேநீரைப் பகிர்ந்ததிலிருந்து, கார் ஷெட்களில் வசித்த காலம் வரை ஒன்றாக இருந்தவர்கள். இருவருமே,  மிக எளிமையான குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். இன்று இருவருமே அவரவர் இடங்களில் உச்சத்தில் இருக்கின்றனர். ஆனாலும், இன்றும் கூட ஒருவரை ஒருவர் சந்திக்க நேரம் ஒதுக்குகின்றனர். ஒருவருக்குப் பிரச்சினையென்றால் மற்றொருவர் உடனே அழைத்துப் பேசுகின்றனர்.

நாங்கள் எல்லாம் அவர்களைச் சுற்றியே இருந்ததால் எங்களைவிட்டு விலகி இருவரும் நடந்துவிட்டு வந்ததைப் பார்க்கும்போது அழகாக இருந்தது.  அவர்கள் என்ன பேசினார்கள் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும். 

இவர்களின் நட்பைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற தூய்மையான, ஆழமான, இணக்கமான நட்பு எனக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். அவருடைய பதிவு  இணையவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.