விஸ்வரூபம் பட வெளியீடு பிரச்னை  தொடர்பாக பேசிய கமல்ஹாசன், இப்படியான கேவலமான மனிதர்கள் இருக்கக்கூடிய ஊரில் இருப்பது எவ்வளவு பெரிய அவமானம் என்று பேசியிருக்கிறார். 


பிரபல யூடியூப் சேனலான கலாட்டா  ‘விக்ரம்’ படத்தின் 50 நாளை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.






அந்த வரிசையில் அவர் நடித்த படங்களில் இருந்து சில காட்சிகள் திரையிடப்பட்டு, அதைப் பற்றி பேசுமாறு கேட்கப்பட்டது. அப்போது விஸ்வரூபம் பட வெளியீட்டு பிரச்னை தொடர்பாக பேசினார்.  அதில்“ படத்தை வெளியீட அனுமதி கொடுக்க வில்லை என்ற உடனே ஊரை விட்டு  ஓடிவிட்டார் என்றார்கள். என்னை கோழை என்று சாடினார்கள். இப்படியான கேவலமான மனிதர்கள் இருக்கக்கூடிய ஊரில் இருப்பது எவ்வளவு பெரிய அவமானம். நான் ஊரை விட்டு சென்றால் யாருக்கு அவமானம். நான் 50 வருடத்திற்கு திட்டமிடவில்லை. 200 வருடத்திற்கு திட்டம் போடுகிறேன்” என்றார். 


முன்னதாக, லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என பெரிய பட்டாளமே நடித்துள்ள மல்டி வெர்ஸ் வகையறா படம் தான் விக்ரம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 






படத்தின் வெற்றியை அங்கீகரித்து, லோகேஷ் கனகராஜூக்கு புதிய காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றையும் கமல்ஹாசன் பரிசாக அளித்தார். திரையரங்குகளைத் தொடர்ந்து டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூலை 8ம் தேதி வெளியானது. ஓடிடியிலும் விக்ரம் படம் சக்கைப்போடு போட்டது.


விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் எங்கோ சென்றுவிட்டது. ஏற்கெனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த விஜய், இப்போது வம்சி படத்தை முடித்துவிட்டு மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையவிருக்கிறார்.


இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து திரையிடும் திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மேலும், நேற்றோடு விக்ரம் படம் வெளியாகி 50 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வசூலிலும் சரி, ரசிகர்களின் மனதையும் சரி இன்னும் வேட்டையாடி கொண்டுதான் இருக்கிறது.