தினமும் குடும்பம் , வேலை என மாங்கு மாங்கென்று உழைத்துவிட்டு கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்றுதான் தியேட்டருக்கு போகிறோம். ஆனால் நம்மைதான் சைத்தான் அங்கேயும் பின் தொடருமே. அந்த வகையில் சமீப காலங்களில் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென்று பேய் பிடித்த மாதிரி எழுந்து புரியாத மந்திரங்களை சொல்லி கத்தும் நிகழ்வு மக்களை அச்சுறுத்தியுள்ளது. இது ஏதோ புது விதமான வைரஸ் என்று நினைக்க வேண்டாம். கொஞ்சம் கூடுதலான தேசப்பற்று அவ்வளவுதான்.
திரையரங்கில் நடக்கும் விநோதம்
இந்தியில் விக்கி கெளஷல் , ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சாவா. மராத்திய மன்னர் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்ட இந்த படம் வடக்கு மாநிலத்தில் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் சம்பவம் என்னவென்றால் படம் பார்க்க வந்தவர்களில் சிலர் திடீரென்று உணர்ச்சி பொங்கி எல்லாரும் பார்க்குபடி வீர வசனம் பேசத் தொடங்கிவிடுகிறார்கள்.
இந்த வினோத நடவடிக்கைகள் இணையத்தில் வீடியோவாக பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. இதெல்லாம் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏற்கனவே ஆட்களை செட் செய்து கூட்டி வருவதாக கூறப்படுகிறது. இன்னும் சிலர் இவர்களை உடனே ஏதாவது மன நல காப்பகத்தில் சேர்க்கும்படியும் கமெண்ட் செய்து வருகிறார்கள். திரையரங்கில் நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்வது மட்டும் பைத்தியக்காரத்தன் இல்லையா என மற்றொரு தரப்பினர் அவர்களுக்கு பதிலடி கொடுத்தும் வருகிறார்கள்.