Champions Trophy 2025:தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் உள்ள நாடுகளில் பாகிஸ்தானும் முக்கியமான நாடாக உள்ளது. இதன் காரணமாக அந்த நாடுகளில் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் காரணமாக வெளிநாட்டினர் செல்வதற்கு தயக்கம் காட்டி வருவதும் உண்டு.
சாம்பியன்ஸ் டிராபி:
இந்த சூழலில், பாகிஸ்தானில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்று வருகிறது. 2009ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற இலங்கை நாட்டு வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் பாகிஸ்தான் நாட்டின் மீதும், பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாறு மீதும் கருப்பு புள்ளியாகவே மாறியது.
தாக்குதல் நடத்த சதி?
இதன்பின்பு, பல ஆண்டுகளாக மற்ற நாட்டினர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் ஆடச் செல்லாமல் இருந்தனர். இந்த சூழலில், கடந்த சில ஆண்டுகளாகத்தான் வெளிநாட்டினர் பாகிஸ்தானுக்குச் சென்று கிரிக்கெட் ஆடி வருகின்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டில் தற்போது இந்தியா தவிர மற்ற நாடுகள் பங்கேற்றுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின் போது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சதித்திட்டத்தை ஐஎஸ்கேபி, ஐஎஸ்ஐஎஸ், தெரிக் -இ - தலிபான் பாகிஸ்தான் ஆகிய அமைப்புகளும், பலுசிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புகளும் இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு தீவிரம்:
அந்த நாட்டு உளவுத் துறையினர் பாதுகாப்புத் துறையினரை எச்சரித்துள்ளனர். இந்த தகவல் காரணமாக ரசிகர்களும், சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்றுள்ள அணிகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த தகவலை அடுத்து பாகிஸ்தான் ராணுவமும், காவல்துறையினரும் போட்டி நடக்கும் மைதானங்கள், வீரர்கள் தங்கும் ஹோட்டல்கள், வீரர்கள் பயிற்சி செய்யும் இடங்கள், வீரர்கள் வந்து செல்லும் வழித்தடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
வெளிநாட்டு அணியினருக்கும், அவர்களது நிர்வாகத்தினருக்கும் மட்டுமின்றி வெளிநாட்டு ரசிகர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த நாட்டு அ்ரசு முன்னெடுத்துள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லவில்லை. இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது.
போட்டிகள் இடமாற்றம்:
மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஐசிசி-யும் இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பல்வேறு பாதுகாப்பு குளறுபடிகளில் சிக்கியுள்ள நாடான பாகிஸ்தானுக்கு இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், விரைவில் இது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.