நீயா நானா நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி நீயா நானா. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 23 ஆண்டுகளாக ஒளிபரப்பப் பட்டு வருகிறது. பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பாக பலதரப்பட்ட பார்வைகளை விவாதத்திற்கு உட்படுத்தி வருகிறது இந்த நிகழ்சி. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இந்த நிகழ்ச்சியை ஆர்வமாக கவனித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியை கடந்த 23 ஆண்டுகளாக ஒரு தனி ஆளாக நின்று கோபிநாத் தொகுத்து வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் ஏப்ரல் 7ஆம் தேதி நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
தமிழ் திரையில் தத்துவ பாடல்கள்
தமிழ் திரைப்படங்களில் தத்துவ பாடல்களைப் பற்றி விவாதிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஒரு பக்கம் தத்துவ பாடல்களை பாடுபவர்களும் இன்னொரு பக்கம் தத்துவ பாடல்களின் ரசிகர்கள் என இரு தரப்பினர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற புரட்சிகரமான பாடல் பற்றிய விவாதம் எழுந்தபோது நடிகர் விஜயகாந்த் நடித்த அலை ஓசை படத்தில் இடம்பெற்ற ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடலை கோபிநாத் உட்பட பங்கேற்பாளர்கள் அனைவரும் பாடியுள்ளது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜயகாந்த்
தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளது. விஜயகாந்தின் மறைவைத் தொடர்ந்து தமிழ் திரையுலகினர் பல தருணங்களில் ஒரு அரசியல் தலைவராகவும் நடிகராகவும் விஜயகாந்தை நினைவு கூறி வருகிறார்கள்.
1985ஆம் ஆண்டு சிறுமுகை ரவி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து வெளியான படம் அலை ஓசை. இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற போராடடா ஒரு வாளேந்தடா பாடல் விளிம்புநிலை மக்களின் எழுச்சிக்கான ஒரு பாடலாக இன்றுவரை கொண்டாடப் பட்டு வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறு பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரு படங்களிலும் இந்தப் பாடல் பின்னணியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Vettaiyan Release : ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அக்டோபரில் ரிலீஸ்.. மாஸ் அப்டேட் தந்த லைகா!