‘குங்ஃபு பாண்டா’


அனிமேஷன் திரைப்படங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கக்கூடிய ஒரு படம் ‘குங்ஃபு பாண்டா’ (Kung Fu Panda). நிஜ வாழ்க்கையில் சோம்பல் முறித்துக் கொண்டு அசைபோட்டுக் கொண்டு திரியும் அதே பாண்டா கரடியை ஹீரோவாக உருவான படம் ‘குங் ஃபு பாண்டா’. தனது பெற்றோர்களால் கைவிடப்பட்டு ஒரு வாத்தால் வளர்க்கப்படும் போ, தனது தந்தையைப் போலவே ஒரு சமையல்காரனாக வளர்கிறான்.


ஆனால் அவனது விதி அவனை ஒரு நூடுல்ஸ் செய்பவனாக இல்லை, தீய சக்திகளை பந்தாடும் ஹீரோவாக தேர்ந்தெடுக்கிறது. தாய் லுங் என்கிற புலி புனிதக் கோயில் இருக்கும் பொக்கிஷத்தை கைப்பற்றி உலகத்தை தன்வசப்படுத்த நினைக்கிறான். அப்படியான கோரமான ஒரு புலியை எதிர்த்து நிற்கப் போகிறார் நமது கதாநாயகன் போ. புலி, பாம்பு, குரங்கு, பாண்டா என மிருகங்களை மையமாக வைத்து வெளியாக இந்தப் படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களைக் கவர்ந்து இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது இப்படத்தின் நான்காவது பாகத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.


குங் ஃபு பாண்டா 4


அரக்கர்களை எதிர்த்து நிற்கும் வீரனாக இருந்த காலம் முடிந்தது. இனி அவன் அமைதியை நிலைநாட்டும் கருவாக மாறவேண்டும் என்று போவிடம் சொல்கிறார் மாஸ்டர் ஷிஃபு. அமைதி என்றாலே அல்ர்ஜியாகக் கருதும்  போ மன அமைதியை தேடி தியானம் செய்யத் தொடங்குகிறான் போ. ஆனால் அவனது கவனம் என்னவோ சாப்பாட்டில் தான் இருக்கிறது.


ஒரு விளையாட்டாக செல்லும் போவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சவால் இந்த முறை காத்திருக்கிறது. அவன் சந்திக்க இருக்கும் வில்லன் யாரைப் போல் வேண்டுமானாலும் உருவம் எடுத்துக் கொள்ளக் கூடிய சக்தி படைத்தவன். தன் பக்கம் ஒரு மிகப்பெரிய படையை திரட்டி வைத்திருக்கிறான்.






இப்படியான சக்திவாய்ந்த வில்லனை எதிர்கொள்ள தாங்களும் ஒரு படையை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் நமது ஹீரோக்கள். புதிய விதமான நகைச்சுவைகள், பிரமாண்டமான சண்டைக் காட்சிகள், குட்டிக்கரணம் அடிக்கும் பாண்டா என இந்த ட்ரெய்லர் முழுவதும் சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் இந்தப் படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.



இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், குங்ஃபூ பாண்டா 4 ட்ரெய்லர் ரசிகர்களைக் கவர்ந்து லைக்ஸ் அள்ளி வருகிறது.