நேற்றைய இரவை சிறையில் கழித்துவிட்டு வீடு திரும்பிய நடிகர் அல்லு அர்ஜூனை அவரது மனைவி கட்டியணைத்து முத்தம் கொடுத்து தனது எமோஷனலை வெளிப்படுத்தினார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் எப்போது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த 5 ஆம் தேதி தீபாவளியாக மாறியது.
நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பின் புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இந்த படம் இதுவரை 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. ஆனால் படம் வெளியான அதேநாளில் ஒரு துயர சம்பவமும் அரங்கேறியுள்ளது.
கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு தெலங்கான மற்றும் ஆந்திராவில் புஷ்பா 2 திரைப்படம் சிறப்புக்காட்சிகள் வெளியிடப்பட்டன. அப்போது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அல்லு அர்ஜூன் படம் பார்க்க சென்றிருந்தார். இதையறிந்த ரசிகர்கள் கூட்டம் மேலும் கூடி நெரிசல் மிகுந்த பகுதியாக மாறியது. இதில், 39 வயது பெண்மணி ஒருவர் தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜூனை கைது செய்தனர். இதனால் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அல்லு அர்ஜூனுக்காக குரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜூனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் ஆவணங்கள் அதிகாரிகளுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டதால் அல்லு அர்ஜூன் சிறையில் அடைக்கப்பட்டார். இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு இன்று காலை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் விடுவிக்கபப்ட்டாலும் அல்லு அர்ஜூன் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று காலை வீடு திரும்பிய அல்லு அர்ஜூனை அவரது மனைவி சினேகா கட்டியணைத்து முத்தம் கொடுத்து வரவேற்றது பார்ப்பவர்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அல்லு அர்ஜூன் “ உயிரிழந்தவரின் குடும்பத்திற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய நான் தனிப்பட்ட முறையில் கடைமைப்பட்டிருக்கிறேன். திரையரங்கிற்குள் குடும்பத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். வெளியே விபத்து நடந்தது. அதற்கும் எனக்கும் நேரடித் தொடர்பு இல்லை. இது முற்றிலும் தற்செயலானது மற்றும் எதிர்பாராதது. கடந்த 20 வருடங்களாக ஒரே திரையரங்கிற்கு சென்று வருகிறேன். அதே இடத்திற்கு 30 முறைக்கு மேல் சென்றுள்ளேன். இதுவரை இதுபோன்ற விபத்து நடந்ததில்லை. வழக்கை சீர்குலைக்கும் வகையில் எதையும் நான் கூற விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.