ஆல்யா பட் - ரன்பீர் கபூர் திருமணத்தில் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று வெளியாகியிருக்கிறது.
ஆல்யா பட் ஹிந்தி திரையுலகில், ஸ்டூடண்ட் நம்பர் ஒன் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனபோது, தனக்கு நடிகர் ரன்பீர் கபூர் மீது மிகப்பெரிய கிரஷ் இருக்கிறது என்று வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ரன்பீர் அப்போது வேறு நடிகையை காதலித்துக் கொண்டிருந்தார். அதன் பின்பு பிரேக் அப் ஆகி, ஆல்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
ஆல்யாபட் பல இடங்களில் ரன்பீர் மீது இருக்கும் காதலை வெளிப்படையாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்-ஆலியா பட் காதல் ஜோடிக்கு கடந்த 14-ம் தேதி திருமணம் நடந்தது. இத்திருமணத்தை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ரன்பீர் கபூர் வீட்டில் திருமண வரவேற்பும் நடத்தப்பட்டது.
இப்போது அவர்களின் வர்மாலா விழாவின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் ஆல்யா மற்றும் ரன்பீர் மாலைகளை பரிமாறிக்கொள்வதையும், அதைத் தொடர்ந்து முத்தமிட்டுக்கொள்வதும் வெளியாகி உள்ளது. விழாவிற்குப் பிறகு, ரன்பீர் தனது 'மனைவி'யை எல்லோருக்கும் அறிமுகப்படுத்துவதைக் காண முடிகிறது, மேலும் தனது மனைவிக்கு ஹாய் சொல்லுங்கள் என்று எல்லோருக்கும் சிரித்துக்கொண்டே காண்பிக்கிறார்.
திருமணத்திற்குப் பிறகு இந்த புதிய தம்பதியின் வர்மலா விழாவின் வீடியோ வைரலானது. வர்மாலா நிகழ்வு என்றால் நம்மூரில் மாலை மாற்றும் நிகழ்வு என்று கூறுவோமே அதுதான். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட அந்த நிகழ்வில் மணமகள் மற்றும் மணமகன் இருவரும் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தனர்.
மேலும் அந்த வீடியோவில், ஆல்யாவின் அம்மா சோனி ரஸ்தான் விழாவை மேற்பார்வையிடுவது தெரிகிறது. மணமக்கள் இருவரும் மாலைகளை பரிமாறிக்கொள்கின்றனர். ரன்பீரின் அத்தை பபிதா முன்னால் அமர்ந்திருந்தார், தம்பதியினர் தங்கள் பால்கனியில் விருந்தினர்களால் சூழப்பட்டிருந்தனர். அலியா தனது கழுத்தில் மாலை போடுவதற்காக, ரன்பீர் முட்டிக்கால் இட்டு குனிந்திருக்கிறார். மாலை அணிவித்துவிட்டு எழுந்து நின்றவுடன் ஆல்யாவை முத்தமிடுகிறார்.
புதுமணத் தம்பதி தங்கள் திருமணத்தை சிறப்பிக்க வந்த அனைத்து விருந்தினர்களையும் பார்ப்பதற்காக திரும்பினர். ரன்பீர் தனது குடும்பத்தாரிடம், "என் மனைவிக்கு ஹாய் சொல்லுங்கள்" என்று கூறினார், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கூறியது போல், ஆல்யாவும் மருதாணியால் அலங்கரிக்கப்பட்ட கையை அசைத்து அவர்கள் அனைவருக்கும் அழகாக "ஹாய்" என்றபோது விழா மேடை நெகிழ்ச்சி அடைந்தது.
ஆல்யா மற்றும் ரன்பீர் முத்தமிடும் தருணம் குறித்து ரசிகர் ஒருவர், "ரன்பீர் முத்தமிட வருகிறார் என்பது ஆல்யாவிற்கு தெரியவில்லை, வெட்கப்படுகிறார்" என்று கருத்து தெரிவித்தார். மேலும் ரன்பீர் ஹாய் சொல்ல சொன்னதால், பலர் இந்த வீடியோவிற்கு ட்விட்டரில் "ஹாய்" என்று பதிலளித்தனர். ரன்பீரின் கண்கள் கலங்கி இருந்ததால், ஒரு ரசிகர், “ரன்பீர் அழுகிறாரா?” என்று கேட்கிறார்.
ஏப்ரல் 14 அன்று அவரது பாந்த்ரா இல்லத்தில் நடந்த விழாவின் படங்களை வெளியிட்டு ஆல்யா இன்ஸ்டாகிராமில் திருமணத்தை அறிவித்தார். அவர் எழுதுகையில், “இன்று, எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் சூழப்பட்டு, வீட்டில், எங்களுக்கு பிடித்த இடத்தில் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். ஏற்கனவே பல விஷயங்கள் நமக்குப் பின்னால் இருப்பதால், இதனை இன்னும் தள்ளிப்போட முடியாது. காதல், சிரிப்பு, புரிதல் கொண்ட மௌனங்கள், மூவி நைட்ஸ், ஊடல்கள், மது மகிழ்வுகள் மற்றும் காதல் கடிகளால் நிறைந்த நினைவுகள். எங்கள் வாழ்க்கையில் இந்த மிக முக்கியமான நேரத்தில் அனைத்து அன்புக்கும் ஒளிக்கும் நன்றி." என்று எழுதி உள்ளார்.