நடிகர் விஜயின் அடுத்து வரும் திரைப்படங்களில் முன்பு இருந்ததை போன்ற அட்டகாசமான நடன அசைவுகளை, இனி பார்க்க முடியாது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விஜயின் டிரேட் மார்க்:


தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த நடிகர்கள் அனைவருமே, மற்ற நடிகர்களை காட்டிலும் ஏதோ ஒன்றில் தனித்துவமாக திகழ்கின்றனர். ரஜினி என்றால் ஸ்டைல், கமல் என்றால் நடிப்பு, அஜித் என்றால் லுக் என்ற வரிசையில், தமிழ் சினிமாவின் இன்றைய முடிசூடா மன்னனாக விளங்கும் விஜய் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அவரது துள்ளலான நடனம் தான். எந்தவொரு முறையான நடன பயிற்சி இல்லாவிட்டாலும் பல கைதேர்ந்த நடன மாஸ்டர்களுக்கு இணையாக அபாரமாக நடனமாடும் திறமையை கொண்டவர். பல நடன மாஸ்டர்களுக்கு விஜயுடன் சேர்ந்து பணியாற்றுவது என்பது கனவாகும்.


திரையில் தெறிக்கும் விஜயின் நடனம்:


பல கடினமான நடன அசைவுகளை கூட பயிற்சி ஏதும் எடுக்காமலேயே அநாயசமாக ஆடி அசத்தும் திறன் கொண்டவர் விஜய். பிரபுதேவா மற்றும் லாரன்ஸ் போன்ற தமிழ் சினிமாவின் பல முன்னணி டான்ஸ் மாஸ்டர்களுக்கு இணையாக திரையில் நடனமாடி அசத்தியுள்ளார்.  காதலுக்கு மரியாதை தொடங்கி அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, தலைவா. ஜில்லா என பல படங்களில் விஜய் நடன அசைவுகளுக்கு திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. பல நீளமான டான்ஸ் ஷாட்ஸை கூட, ஒரே டேக்கில் முடித்துக் கொடுப்பதில் வல்லவர்.


தடுமாறும் விஜய்:


அத்தகைய துள்ளலான நடன அசைவுகளுடன் விஜயை இனி திரையில் காண்பது கடினம் என்றே கருதப்படுகிறது. விஜய்க்கு உள்ள ரசிகர் பட்டாளத்திற்கு, அவர் திரையில் தோன்றுவதே போதுமானது. ஆனாலும், தன்னை காண வரும் ரசிகர்களை திருப்திபடுத்ததான் கடினமான நடன அசைவுகள், சண்டைக் காட்சிகள் போன்றவற்றில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், அண்மை காலங்களில் விஜயின் நடனத்தில் முன்பு இருந்த வேகத்தையும், துள்ளலையும் நம்மால் உணர முடியவில்லை.


வயசாகுதுல..!


விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படத்தில், ரஞ்சிதமே எனும் பாடலை அவரே பாடியிருந்தார். அதன் இறுதியில் ஒரு நீளமான டான்ஸ் ஷாட்டை ஒரே டேக்கில் விஜய் ஆடி இருப்பார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடனமாடிய, அந்த ஷாட்டை முடிப்பதற்குள் அவர் மிகவும் சிரமப்பட்டு இருந்தார். அந்த ஷாட் முடியும்போது தான் நமக்கும் தெரிகிறது விஜய் 50 வயதை நெருங்கியுள்ளார் என்பது. இந்நிலையில் தான், விஜய் தனது அடுத்து வரும் படங்களில், நடனங்களை காட்டிலும் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தர முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


விஜயின் அடுத்த பிளான்:


தனது ரசிகர்களை திருப்திபடுத்துவதற்கான அனைத்து அம்சங்களும் இருக்கிறது என்பதை உணர்ந்த பின்பு தான், விஜய் ஒரு கதையையே தேர்வு செய்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அம்சங்களில் நடனமும் ஒன்று. ஆனால், தனது வயதை கருத்தில் கொண்டு இனி கடினமான நடன அசைவுகளில் ஈடுபடுவதை குறைத்துக் கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு மாறாக, தனது ரசிகர்களுக்காக இனி தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் ஒரு பாடலை பாட விஜய் முடிவு செய்துள்ளதாகவும் அவருடைய நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக தான், கடந்த சில ஆண்டுகளாக அவரது நடிப்பில் உருவாகும் அனைத்து படங்களிலும் விஜய் ஒரு பாடலையாவது தொடர்ந்து பாடி வருகிறார்.