ஆஸ்கர் விருது விழாவுக்கு இந்தியா சார்பில் அனுப்ப ‘செலோ ஷோ’ படம் தேர்வாகியுள்ள நிலையில், அது குறித்து காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு படங்களுக்கான 95 ஆவது ஆஸ்கர் விருது விழா 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் சிறந்த அந்நிய மொழித் திரைப்படத்திற்கான பிரிவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்தியா சார்பில் இருந்து சிறந்த படத்தை தேர்வு செய்ய, தேர்வு குழுவுக்கு இந்தியிலிருந்து பதாய் தோ, மாதவனின் ராக்கெட்ரி, ஜுண்ட், பிரம்மாஸ்திரம், தி காஷ்மீர் ஃபைல்ஸ், அனெக் ஆகிய 6 படங்களும், தமிழில் இருந்து இரவின் நிழல், குஜராத்தியில் இருந்து செலோ ஷோ, தெலுங்கில் இருந்து ஆர்ஆர்ஆர், ஸ்தலம், திமாசா (அசாம்)-1 - செம்கோர் ஆகிய படங்களும், மலையாளத்தில் இருந்து அரியுப்பு , பெங்காலியில் அபராஜிதோ ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
இதில் காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களில் ஒன்று நிச்சயமாக ஆஸ்கருக்கு தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவற்றுக்கு மாறாக ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் குஜராத்தி மொழிபடமான செலோஷோ படம் தேர்வாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அமைந்தது.
இது குறித்து பேசிய தேர்வு குழு தலைவர் நாகாபரணா கூறும் போது, “ ஆஸ்கர் விருது தேர்வுக்கு 13 படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. பல மொழிகளில் இருந்து பல சிறந்த திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக குஜராத்தி திரைப்படம் 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல சிறந்த படைப்புகளில் இருந்து ஒருமனதாக ஆஸ்கர் விழாவிற்கு 'செலோ ஷோ' (தி லாஸ்ட் ஷோ) என்ற தலைப்பில் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் வாழ்வில் சினிமாவின் அருமையை சொல்வது மட்டுமின்றி ஒவ்வொரு திரைப்பட ரசிகனின் உணர்வுகளை கூறும் சிறந்த படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் இந்திய மரபையும், பாரம்பரியங்களையும் நுட்பமாகவும் உண்மையாகவும் வெளிப்படுத்துகிறது, இது வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இந்தியாவின் முகத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.” என்று பேசினார்.
இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பபட்ட செலோ ஷோவுக்கு வாழ்த்து தெரிவித்து காஷ்மீர் ஃபைல்ஸ் டைரக்டர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அந்த ட்விட்டர் பதிவில், “ இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு நுழைய உள்ள செலோ ஷோ படத்தின் மொத்த குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள். ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படத்திற்கான விருது உங்களுக்கு கிடைக்க வேண்டும் என நான் வாழ்த்துகிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.