தமிழகத்தில் கடைகோடியில் இருந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களை சிரிக்க வைத்து மகிழ்வதில் கெட்டிக்காரர் ஜி.பி.முத்து. தன் உடல்மொழியாலும், வாய் மொழியாலும் அவர் செய்த சேட்டைகளும் வசனங்களும் தான் ஜிபி முத்துவுக்கு பெரிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது. தொடங்கும் போது, கொஞ்சம் ஆபாச வார்த்தைகளோடு ஆரம்பித்த இவரது பயணம். தற்போது கொஞ்சம் குறைந்திருந்தாலும், இலை மறை காயாக இடையே இடையே வந்து கொண்டு தான் இருக்கிறது.


ஆனாலும் மக்கள் அதை தான் விரும்பி பார்க்கின்றனர். ஆதரவு தருகின்றனர். அள்ளித்தருகின்றனர். இதனால், ஜி.பி.முத்து தன் பாணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தான், டிடிஎப் வாசனுடன் ஆபத்தான பைக் பயணம் சென்று, தமிழ்நாடு முழுக்க பேசும் பொருளாக மாறிய ஜிபி முத்து, அந்த சம்பவத்தால், வாசன் மீது எப்.ஐ.ஆர்., போடும் அளவிற்கு நிலை சென்றதற்கு தானும் ஒரு காரணம் என்பதை அறியாமலேயே அடுத்த டூருக்கு கிளம்பிவிட்டார்.






ஆம்... இப்போ நெல்லை சிங்கம், துபாயில் கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் ‛சேக்’ உடையில், அரபு பாலைவனத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. முதன் முதலில் துபாய் செல்லும் முன் வீடியோ வெளியிட்டு புறப்பட்ட ஜி.பி.முத்து, ‛தன் குழந்தைகளையும் மனைவியையும் விட்டுச் செல்வது மனவருத்தம் அளிப்பதாக,’ கூறிச் சென்றார்.


அதன் பின் சென்னை விமான நிலையம் வந்த ஜி.பி.முத்து அங்கு அவருக்கான டிக்கெட் வாங்குவது முதற்கொண்டு அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டார். பின்னர் ஏர் இந்தியா விமானத்தில் டில்லி புறப்பட்டு, டில்லியில் இருந்து துபாய் புறப்பட்ட ஜி.பி.முத்து, துபாயில் நடைபெறும் ‛தமிழ் புள்ளிங்கோ’ நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதாக தெரிவித்திருந்தார். துபாய் விமான நிலையத்தில் ‛தமிழ் புள்ளிங்கோ’ சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 






அதன் பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.பி.முத்து, துபாயை ஒரு ரவுண்ட் அடித்தார். குறிப்பாக அரபு உடை அணிந்து, பாலைவனத்தில் வலம் வந்ததும், ‛உயிரின் உயிரே...’ பாடலை போட்டு ரீல்ஸ் செய்ததும், சுவாரஸ்யமாக இருந்தது. தொடர்ந்து துபாயின் உணவுகள், இடங்கள் என அனைத்தையும் ரசித்து ருசித்த ஜி.பி.முத்து, அது தொடர்பான வீடியோக்களை அடுத்தடுத்து பதிவிட்டு வருகிறார்.