வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான முகமான நடிகர் வைரவன் டிசம்பர் 3ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2009ம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'வெண்ணிலா கபடி குழு'. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், சூரி, வைரவன், சரண்யா மோகன், கிஷோர், அப்புக்குட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பை பெற்று ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக நடித்தவர் தான் நடிகர் வைரவன். இப்படம் மட்டுமின்றி விஷ்ணு விஷால் நடித்த குள்ளநரி கூட்டம் திரைப்படத்திலும் துணை நடிகராக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து சரியான திரைப்பட வாய்ப்புகள் அமையாததால் வறுமையில் வாடியது வைரவனின் குடும்பம். வறுமையுடன் சேர்த்து உடல்நல பிரச்சினைகளும் ஏற்பட, சில மாதங்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து இதயம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் ஏற்பட்டு செயலிழந்தன. பொருளாதார நெருக்கடியால் சரியான சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் சில தினங்களுக்கு முன்னர் காலமானார்.
விஷ்ணு விஷால் இரங்கல் :
வைரவனின் மறைவுக்கு ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்த சக நடிகர் மற்றும் நண்பருமான நடிகர் விஷ்ணு விஷால் அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்றும் வெண்ணிலா கபடி குழு படப்பிடிப்பில் அவருடன் பழகிய அந்த நினைவுகள் என்றும் நினைவில் இருக்கும் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கட்டா குஸ்தி சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பில் வைரவனின் குழந்தைக்கான கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த செயல் அனைவரின் பாராட்டை குவித்து வருகிறது. வைரவனின் மனைவியான கவிதாவிற்கு 2 வயதில் யோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது.
முன்னதாக, கடந்த ஆறு மாதங்களாக மிகவும் மோசமான சூழலில் வைரவன் இருந்த போது அவருக்கு விஷ்ணு விஷால் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய ரிலீஸ் :
தற்போது விஷ்ணு விஷால் - ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் 'கட்டா குஸ்தி'. அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து லால் சலாம் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.