ட்விட்டர் ஹேண்டிலில் தனது பெயரை இர்ஃபான் அகமது என மாற்றியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.


இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் எஃப்ஐஆர். இந்தப் படத்திற்கு சில வெளிநாடுகளிலும் தெலங்கானா மாநிலத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் ஹேண்டில் பெயரை மாற்றியுள்ளார். தமிழ்த் திரையுலகின் வளர்ந்துவரும் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர், விஷ்ணு விஷால். முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் எஃப்ஐஆர் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


இந்தப் படத்தை கவுதம் வாசுதேவ் மேனனிடம் துணை இயக்குநராக இருந்த மனு ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், கவுதம் மேனன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா, ரைசா இன்னும் பலர் நடித்துள்ளனர். இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்துவது தவறு எனப் புரியவைக்கவே இந்தப் படத்தின் இயக்குநர் முயற்சி செய்துள்ளார்.


அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்திலும் இதே புள்ளி இருக்கும். வெங்கட் பிரபுவின் அந்த முயற்சி வெற்றி பெற்றது. அதேபோல் இந்தப் படத்தில் வலுவாக அதைப் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் மனு ஆனந்த். ஆனால் இந்தப் படத்தின் போஸ்டரில் ஷதா என்ற உருது வார்த்தை இடம் பெற்றிருந்ததை மட்டுமே வைத்துக் கொண்டு, இப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் எம்எல்ஏக்கள் தெலங்கானா ஐடி அமைச்சரை சந்தித்துப் புகார் கூறியுள்ளனர்.


இதேபோல் இந்த போஸ்டர் சர்ச்சையால் மலேசியா கத்தார் உள்ளிட்ட நாடுகளிலும் முதலில் படம் வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.


இந்த சர்ச்சைகளுக்கு இடையில்தான், ட்விட்டர் ஹேண்டிலில் தனது பெயரை இர்ஃபான் அகமது என மாற்றியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.





அந்த ட்வீட்டில், 3 வருடங்களுக்குப் பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டுகள் குவிந்துள்ளதாகவும். தனது கடின உழைப்புக்குக் கிடைக்கும் அங்கீகாரத்துக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும் விஷ்ணு விஷால் பதிவிட்டுள்ளார்.