விஷால் , ரீமாசென், ஷ்ரேயா ரெட்டி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து வெளியானத் திரைப்படம் திமிரு. கடந்த 2006 ஆம் வருடம் வெளியான இந்தப் படத்தை தருண் கோபி இயக்கி யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். செல்லமே , சண்டகோழி ஆகிய இரண்டு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து திமிரு படம் மூலமாக தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தார் விஷால். இந்த படம் வெளியாகி இன்றோடு 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திமிரு படத்தில் விஷால் கணேஷ் என்ற கேரக்டரிலும், ஸ்ரேயா ரெட்டி ஈஸ்வரி என்ற கேரக்டரிலும் நடித்திருந்தனர்.
திமிரு
வழக்கமான ஹீரோ வில்லன் கதை தான் என்றாலும் இந்தப் படம் மக்களிடையே அதிகம் வரவேற்பைப் பெற்றதற்கு காரணம் பெண் கதாபாத்திரம் இந்தப் படத்தில் வில்லனாக (ஈஸ்வரி ) இருந்தது என்பதால் தான். ஆனால் ஈஸ்வரியின் கதாபாத்திர வடிவமைப்பிற்கு பின் இருக்கும் காரணமும், ஈஸ்வரி கதாபாத்திரத்தின் குறை என்று கதாநாயகனான விஷால் சொல்லும் காரணங்களும் ஆண் ஆதிக்க மனோபாவத்தில் இருந்து பேசுவதாகவே இருக்கின்றன என்பதை ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போதும் விறுவிறுப்பானக் காட்சிகளின் ஓட்டத்தில் நாம் கவனிக்கத் தவறவிடுகிறோம்.
ஈஸ்வரி
முதலில் ஈஸ்வரியின் கதாபாத்திரம் எந்த வகையில் ஆண்சார் சிந்தனைகளை கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம். பல்வேறு ஆண்களை தனக்கு கீழ் கட்டுப்படுத்தி வருபவள் ஈஸ்வரி. கொடுத்த கடனை திருப்பி கொடுக்காமல் விட்டால் நடு ரோட்டில் நிறுத்தி அவமானப்படுத்தக் கூடியவள். ஆனால் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஈஸ்வரியின் கதாபாத்திரம் மற்ற பெண்களை நடத்தும் முறைகளை கவனித்தால் அதில் இருக்கும் ஆண் கருத்தாக்கங்கள் தெரியவரும். ஒருவரை அவமானப்படுத்த ஈஸ்வரி செய்வது அவர்கள் வீட்டுப் பெண்களை அவமானப்படுத்துவதும் பெண்களின் ஆடைகளை உருவுவதும் தான். இதையெல்லாம் செய்வது ஈஸ்வரியா ஈஸ்வரி கதாபாத்திரத்தை எழுதிய ஒரு ஆணின் பேனாவா என்கிற சந்தேகமே எழுகிறது
திமிர் பிடித்தப் பெண்களை சகித்துக்கொள்ளாத ஆண்கள்
என் பாட்டியுடன் திமிரு படத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது கணேஷை திருமணம் செய்ய ஈஸ்வரியின் போராட்டத்தை கவனித்த என் பாட்டி சொன்னார். இவள் இவனிடம் நல்லவளாகத்தானே இருக்கிறாள். பேசாமல் கல்யாணம் பண்ணிருக்கலாமே “ என்று தான். ஒரு நொடி அட ஆமாம் என்று தான் தோன்றியது. உண்மையில் திமிரு படத்தில் ஈஸ்வரியின் கதாபாத்திரம் ஒரு ஆணுக்கு சவால் விடும் அளவிற்கு துணிச்சலான ஒரு கதாபாத்திரமாக அமைக்கப்பட்டு, பின் கதாநாயகன் அவளைத் திருமணம் செய்ய மறுப்பதன் மூலம் திமிரு பிடித்தப் பெண்களுக்கு இதுதான் நிலைமை என்கிற கருத்தாக்கத்தை நம் மனதில் பதிவு செய்கிறது.
ஒரு காட்சியில் தன்னிடம் என்ன குறை என்று ஈஸ்வரி கேட்கையில் பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று விஷால் வசனம் பேசுவார். ஆரம்பத்தில் துணிச்சலான ஒரு பெண்ணாக காட்டப்படும் ரீமாசென் கூட விஷாலுடன் இடம்பெறும் காட்சிகளில் லட்சனமாக காட்டுவதற்காக சாந்த சொரூபினியாக காட்டப்பட்டிருப்பார். வாழ்க்கையில் எல்லாவற்றின் மேலும் தனது கட்டுப்பாட்டை வைத்திருக்கும் ஈஸ்வரி விஷால் ஒரு அடி கொடுத்ததும் அவன்மேல் காதல் வையப்பட்டு அவனுக்காக உயிரிழந்தும் போகிறார்.
ஒட்டுமொத்தமாக இன்று திமிரு படத்தைப் பார்க்கும்போது வழக்கமான பெண் குணாம்சங்கள் இல்லாத ஒரு பெண், பாரம்பரியமான ஒரு பெண்ணை எதிர்பார்க்கும் ஒரு ஆண் ஆகிய இரு கதாபாத்திரங்களுக்கான மோதலாகவே தெரிகிறது.