Vishal: சென்னையில் பாதிப்பை ஏற்படுத்திய மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு உணவளித்த ஸ்விக்கி ஊழியர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கத்தினர் உணவளித்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. 

 

கடந்த வாரம் சென்னையைக் கடந்து சென்ற மிக்ஜாம் புயல் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. பெரும்பாலான இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். உணவு, பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மக்கள் வெளியே வர முடியாததால் வீடுகளில் முடங்கினர். பாதிப்பு மிகுந்த பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

 

குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்ததால் சிலர் ஸ்விக்கி, ஜொமேட்டோவில் உணர்வு ஆர்டர் செய்தனர். மழை பெய்த இரண்டு நாள்களும் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவர்களுக்கு ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ஊழியர்கள் சில இடங்களில் மழையைப் பொருட்படுத்தாமல் டெலிவரி செய்து வந்தனர். இந்த நிலையில் மக்களுக்கு உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கத்தினர் உணவு சமைத்து வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. 

 





 

முன்னதாக புயலால் ஏற்பட்ட கனமழையின்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகர் விஷால், தனது வீட்டில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும், வயதான பெற்றோர் அச்சத்தில் இருப்பதாகவும் கூறியதுடன், மக்களுக்கு உதவ ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த எம்.எல்.ஏ.க்கள் வெளியே வந்து உதவுமாறு காட்டமாக பேசியிருந்தார்.  அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது சினிமா அல்ல என சென்னை மேயர் பிரியா பேசி இருந்ததும் சினிமா, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் சென்னை புயல் பாதிப்பில் விஷால் மட்டும் இல்லாமல் நடிகர்கள் பார்த்திபன், KPY பாலா, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். இதேபோன்று விஜய் மக்கள் இயக்கம் தரப்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன.