மதகஜராஜா

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் , சந்தானம் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாக இருந்த படம் மதகஜராஜா. தயாரிப்பாளருக்கு இருந்த பல்வேறு சிக்கல்களால் இந்த படம் 12 ஆண்டுகள் நிலுவையில் கிடந்தது. கடந்த சில ஆண்டுகளில் பல சவால்களை எதிர்கொண்டு சுந்தர் சி இந்த படத்தை அவரே வெளியிட்டார். கடந்த ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான கேம் சேஞ்சர் வணங்கான் ஆகிய படங்கள் பெரியளவில் மக்களை கவரவில்லை என்பதால் மதகஜராஜா படத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது. 

மதகஜராஜா வசூல்

சுந்தர் சி இயக்கத்தில் உருவான கலகலப்பு , அரண்மனை ஆகிய படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு வெளியான அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி வசூல் ஈட்டு ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது மதகஜராஜா படத்தில் விஷால் , சந்தானம் , மனோபாலா , அஞ்சலி , வரலட்சுமி , மணிவண்ணன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளது இப்படத்தின் மீது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. 

திரையரங்கில் வெளியான முதல் நாள் தொடங்கியே படத்திற்கு அமோக வசூல் குவிந்து வருகிறது. சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை 8 நாட்களில் 45 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனி வரக்கூடிய சில நாட்களில் படம் 50 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மதகஜராஜா படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக விஷால் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 , பின் டிமாண்டி காலணி இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விஷால் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.