8 பேர் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப விருது வழங்குவதில் தனக்கு உடன்பாடு இல்லை என தேசிய விருது குறித்து நடிகர் விஷால் பேசியுள்ளார். 


தமிழ் திரையுலகில் ’செல்லமே’ படத்தின் மூலம் அறிமுகமான விஷால், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகங்களுடன் முன்னணி பிரபலமாக வலம் வருகிறார். நடிகர் சங்கத்திலும் இடம்பெற்றிருக்கும் விஷால், தமிழ் திரையுலகில் செல்வாக்கு பெற்ற நடிகராக உயர்ந்துள்ளார். இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் விஷாலுக்குதிரை பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். தன் பிறந்த நாளை ஒட்டி கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்திற்கு சென்ற விஷால், அங்குள்ள முதியவர்களுக்கு உணவு கொடுத்து பிறந்த நாளை கொண்டாடினர். 


நிகழ்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும், விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் பேசியுள்ளார். ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த விஷால், ”ரஜினி சார்க்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரசிகர்கள் கொடுத்துள்ளனர். இந்த வயதிலும் ஓய்வு எடுக்காமல் சூப்பர் ஸ்டாரால் நடிக்க முடிகிறது என்றால் அது சாதாரணமானது இல்லை. எங்களுக்கு அவர்தான் முன்னுதாரணம்” என்றார். 


சூர்யாவின் ஜெய்பீம், சார்பட்டா பரம்பரை படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஷால் ”விருது வழங்குவதில் எனக்கு எந்த ஒரு உடன்பாடும் இல்லை. 4 பேர் விருது வழங்குவது எல்லாம் தேவையில்லாதது. நடிகருக்கு மக்கள் கொடுப்பதுதான் உண்மையான விருது.


தேசிய விருது வழங்குவது 8 பேரின் விருப்பமே தவிர, அது ஒட்டுமொத்த மக்களின் விருப்பம் இல்லை. இந்தியா முழுவதும் வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கும். எந்த விருது மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கூட நான் பங்கேற்பதில்லை” என காட்டமாக கூறினார். 


விஜய்யின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு, “ எல்லாரும் அரசியல்வாதிகள்தான். அரசியல் என்பது தொழில் இல்லை. அது ஒரு சமூக சேவை. அந்த வகையில் எல்லாரும் அரசியல் சேவையை செய்யலாம். விஜய் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். காலேஜ் படிக்கும் போதிலிருந்து எனக்கு விஜய் பற்றி தெரியும். தன்னம்பிக்கையுடன் இருக்கும் விஜய்யை மிகவும் பிடிக்கும்.


தென் இந்தியாவில் எனக்கு தெரிந்த ஒரே விஜய் இளைய தளபதி தான். விஜய் படத்தை முதல் நாளே பார்க்கும் ரசிகன் நான். விஜய் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக நான் வரவேற்பேன். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாவதற்கு வாழ்த்துகள். விஜய் மகனை பார்த்துதான் நானும் இயக்குநராக ஆக வேண்டும் என்று எனக்கு தோன்றியுள்ளது” என கூறியுள்ளார்.


முன்னதாக பேசிய விஷால், தனது பிறந்த நாள் முதியோர் இல்லத்தில்தான் தொடங்கும் என்றும், பல ஆண்டுகளாக அதை கடைப்பிடித்து வருவதாகவும் கூறியுள்ளார். தனது பிறந்த நாளில் முதியோரின் வாழ்த்துகளை பெறுவது பெரிய பாக்கியம் என்றும், அறக்கட்டளை மூலம் முதியவர்களுக்கு உதவுவதால் மனது நிறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.