செல்லமே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஷால் . பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஆனாலும் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.படங்கள் நடித்த பொழுதே , விஷால் நடிகர் சங்கம் உள்ளிட்ட பல வேலைகளில் பிஸியாக இருந்ததால்தான் கதை தேர்வுகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர் அவருக்கு
நெருக்கமானவர்கள் . அதனால் அடுத்த வருடத்தை தன் வசமாக்க போராடிக்கொண்டிருக்கிறாராம் விஷால். பேக் டு பேக் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள விஷால் தற்போது தனது நெருங்கிய நண்பரான ஆர்யாவுடன் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தை நடித்துக்கொடுத்துள்ளார். எனிமி படத்தில் ஆர்யா வில்லனாகவும், விஷால் ஹீரோவாகவும் நடித்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே. ஆர்யா - விஷால் காம்போவில் ஏற்கனவே அவன் இவன் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தற்போது உருவாகியுள்ள எனிமி படம் முதலில் ஆயுத பூஜையன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் தீபாவளி ரேஸுக்கு தயாராகிவிட்டது.
விஷால் தற்போது அறிமுக இயக்குநர் வினோத் இயக்கும் வீரமே வாகை சூடும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விஷாலின் 32 வது படமாக உருவாகி வருகிறது. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்து வருகிறார். வெகு நாட்களுக்கு பிறகு சோலோ ஹீரோயினாக சுனைனா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எனிமி படத்தின் கிளைமேக்ஸ் காட்சி எடுக்கும் பொழுதே , வீரமே வாகை சூடும் படத்தின் படப்பிடிப்புகளிலும் விஷால் கலந்துக்கொள்ள தொடங்கிவிட்டார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. போஸ்ட்புரடெக்ஷன் வேலைகளும் துரிதமாக நடைப்பெற்று வருவதால் படம் புத்தாண்டு பண்டிகையை குறி வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல விஷால் தனது 33 மற்றும் 34 வது படத்திலும் ஒப்பந்தமாகிவிட்டார். 33 வது படத்தை அறிமுக இயக்குநருக்கே கொடுக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் , திரிஷா இல்லைனா நயன்தாரா, பாகிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்ஷன் திரில்லர் கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.படத்தை வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். வீரமே வாகை சூடும் படத்தின் ரிலீஸுக்கு பிறகு , சிறிது கால இடைவெளியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே போல விஷாலின் 34 வது படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவி நடித்த ’அடங்கமறு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.