பருத்திவீரன் படத்துக்கு பின் கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த கார்த்தி, நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் கிராமத்துக்கு நாயகனாக களமிறங்கிய படம் தான் கொம்பன். முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு ரிலீசான இப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்ததோடு, கார்த்தியின் கெரியரில் முக்கிய படமாகவும் அமைந்தது.
இதன் பின்னர் 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடிகர் கார்த்தி, மீண்டும் முத்தையா உடன் கூட்டணி அமைத்துள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து இருக்கிறார். இப்படம் மூலம் அவர் ஹீரோயினாகவும் அறிமுகமாகி உள்ளார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்’.
கார்த்தி, அதிதி ஷங்கர்,சூரி, ஆர்.கே.சுரேஷ், பிகில் பாண்டியம்மாள், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி புரொடக்ஷனில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வெளியாக உள்ள நிலையில் படம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதன்படி இணை இயக்குனர் ஒருவர் விருமன் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனை இயக்குனர் முத்தையா திருடி படமாக எடுத்துள்ளதாகவும் எழுத்தாளர் சங்கத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுதொடர்பாக சமாதான பேச்சும் நடைபெற்று வருகிறதாம். கடைசி நேரத்தில் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதால் விருமன் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கார்த்தி - முத்தையா கூட்டணியில் வெளியான கொம்பன் படமும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்