சூர்யா தயாரிப்பில், கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் முத்தையா இயக்கியுள்ள 'விருமன்' படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியானது. இப்படம் இதுவரை உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரிக் குவித்துள்ளது. படம் தொடர்ந்து திரையரங்கு நிரம்பிய காட்சிகளாக ஓடி வருகிறது.
இப்படத்தின் சக்சஸ் மீட் விழா நேற்று (ஆக.16) சென்னையில் கொண்டாட்டமாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு தாரை தப்பட்டை முழங்க நடிகர் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா இருவரும் வருகை தரும் காட்சிகள் முன்னதாக சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆகின. குறிப்பாக நடிகர் சூர்யா வித்தியாசமான கெட் அப் அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், முன்னதாக படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். அத்துடன் 'விருமன்' படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவுக்கு வைர மோதிரத்தையும் பரிசளித்து கௌரவித்துள்ளார்.
முன்னதாக நடிகர் சூர்யா 'விக்ரம்' படத்தில் நடித்ததற்காக நடிகர் கமல்ஹாசனிடமிருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை முன்னதாக பரிசாக பெற்ற நிலையில், தற்போது 'விருமன்' படத்துக்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைரக் காப்பினை பரிசாக பெற்றுள்ளார்.
முத்தையா படம்
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்குபவர் இயக்குநர் முத்தையா. குட்டிபுலி, கொம்பன், மருது,கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.படங்கள் கிராமத்து ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கிய படங்கள் அனைத்திலும் சாதிய சாயல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான தேவராட்டம் படம் , கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
படமும் தோல்வியை தழுவியது. அதன் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை இயக்கினார். அதுவும் எதிர்பாத்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு கிராமத்து கதையை முத்தையா கையில் எடுத்த படம்தான் ‘விருமன்'.
சூர்யா, ஜோதிகாவுக்கு சொந்தமான ‘2டி எண்டர்டைன்மெண்ட்’ தயாரிக்க இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்