பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜு இன்று மறைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற பாகுபலி புகழ் பிரபாஸ் கிருஷ்ணம் ராஜு உடலைப் பார்த்து கண்ணீர்விட்டு கதறி அழுதார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. பிரபாஸை மெகாஸ்டார் சிரஞ்சீவியும், நடிகர் மகேஷ் பாபுவும் ஆறுதல் கூறி தேற்றினர். கிருஷ்ணம் ராஜூ அண்மையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'ராதே ஷியாம்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 






யார் இந்த கிருஷ்ணம் ராஜூ:


தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர். மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.  நடிப்பிற்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். இவர் தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக நுழைந்த கிருஷ்ணம் ராஜுபிற்காலத்தில் வில்லனாக வலம் வந்தவர். இவர் தெலுங்கில் மட்டுமே 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மொத்தமாக இவர் இதுவரை 183 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் 'ரிபல் ஸ்டார்' என்ற அடைமொழியும் உண்டு.






இந்நிலையில், கிருஷ்ணம் ராஜூ உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், இன்று (செப்.11) அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். நாளை இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் இன்றும், நாளை மதியம் வரையும் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரது மறைவு தெலுங்கு திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.









அவரது உடலுக்கு பழம்பெரும் நடிகர்கள் முரளி மோகன், மோகன் பாபு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். ஜூனியர் என்டிஆரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இயக்குநர்கள் திரிவிக்ரம், ராகவேந்திரா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேச கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவும் அஞ்சலி செலுத்தினார். இன்னும் பல பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.