மணிப்பூரில் தண்ணீரில் நீந்திச் சென்று ஒரு எலி தனது குட்டியை காப்பாற்றி எடுத்து வரும் வீடியோ வைரலாகி வருகிறது. அம்மா என்றாலே தனது குழந்தைகளைக் காப்பாற்ற எதையும் செய்யத் துணிவார் என்பது உண்மை. அது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் பொருந்தும். இதனை மணிப்பூரில் ஒரு எலி நிரூபித்துள்ளது. ஒரு குளத்தில் நீந்திச் சென்று தாய் எலி தனது குட்டியை மீட்டிவரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மணிப்பூரில் ஒரு சேறும் சகதியுமான குளத்தில் திடீரென ஒரு எலி வேகமாக நீந்திச் செல்கிறது. அது ஏன் வேகமாக நீந்திச் செல்கிறது எதற்காக என யோசித்து முடிப்பதற்குள் விரைந்து குளத்தின் மறு கரைக்கு விரைகிறது. கரையில் ஏறி புதர்களுக்கு நடுவே வேகமாகச் செல்கிறது. புதருக்கு நடுவில் திடீரெனக் காணாமல் போகும் அந்த எலி திடீரென வாயில் எதையோ கவ்வியபடி தண்ணீருக்குள் இறங்குகிறது. அது கவ்வியிருப்பது பிறந்து சில தினங்களே ஆன அதன் குட்டி. மீண்டும் நீரில் இறங்கும் எலி அதனை வாயில் கவ்வியபடியே மறுகரைக்குச் சென்று அதனை கரையில் வைக்கிறது. மனதை வருடும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



அண்மையில் தமிழ்நாட்டில் தாய் யானையைப் பிரிந்த குட்டி யானை ஒன்று அதன் தாயிடம் மீண்டும் சேர்க்கப்பட்ட வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.


அண்மையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் ஏழு யானைகள் கூட்டமாக வந்தன.அதில் இருந்த குட்டியானை மட்டும் வழிதவறி கூட்டத்தில் இருந்து பிரிந்தது.பிறந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில்  கூட்டத்தில் வந்த குட்டி சுரங்கத்தில் தவறி விழுந்தது. குட்டியை மீட்ட வனச்சரகத்தினர் காத்திருந்து அதனை மீண்டும் கூட்டத்துடன் சேர்த்தனர். தன்னை மீட்டவர்களை விட்டுப் பிரிய மனம் வராத அந்த குட்டி வனச்சரகத்தினருடன் மேடு பள்ளங்களில் நடந்து சென்றதும் அவர்களது கால்களைப் பற்றிக்கொண்டு சமர்த்தாக நின்றதும் வீடியோக்களாக ஆன்லைனில் வலம் வந்து வைரலானது. மனிதர்களின் வாடை அதன்மீது படாமல் பார்த்துக்கொண்டு குட்டியானையை அதனது கூட்டத்துடன் வனச்சரகத்தினர் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.