தமிழ்நாட்டில் நாளை (செப்டம்பர் 18) ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை இடம் பெற்ற விநாயகர் தொடர்பான பாடல்களை காணலாம். 



  • 1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, வாகை சந்திரசேகர், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘கரகாட்டக்காரன்’. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த இந்த படத்தில் ”முந்தி முந்தி விநாயகனே” என்னும் பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடலுக்கு இளையராஜா இசையமைத்த நிலையில், கங்கை அமரன் எழுதிய வரிகளை  மனோ, கே.எஸ்.சித்ரா பாடியிருந்தனர். 




  • 1992 ஆம் ஆண்டு  வெளியான தெய்வ குழந்தை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்திருந்தார். இந்த படத்தில் சில்க் ஸ்மிதா, வைஷ்ணவி, ஜி.எஸ்.மது, ராதாரவி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலருடன் யானை ஒன்று முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது. செந்தில் நாதன் இயக்கிய இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ‘விநாயகர் பாரு..வித்தை காட்டுவாரு” என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. 




  • 1993 ஆம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் சத்யராஜ், ரகுமான், சுகன்யா, கஸ்தூரி, திலகன்,நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த படம் ‘உடன் பிறப்பு’.  இளையராஜா இசையமைத்த இப்படத்திற்கு வாலி பாடல்களை எழுதியிருந்தார். அதில் "சாமி வருது..சாமி வருது..வழியை விடுங்கடா" என்னும் பாடல் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாடப்படுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மனோ, எஸ்பி பாலசுப்ரமணியம் ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியிருந்தனர். 




  • 1996 ஆம் ஆண்டு வெற்றி விநாயகர் என்னும் பட்ம வெளியானது. கே.ஷங்கர் இயக்கிய இந்த படத்தில் ஊர்வசி, நிழல்கள் ரவி, ராதா ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் "ஓம்கார ரூபத்தில் பொருளானவன்", "ஜெகநாத விக்னேஸ்வரா" ஆகிய 2 பாடல்கள் இடம் பெற்றிருந்தது. 




  • 1996 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் வான்மதி படம் வெளியானது. இதில் அஜித் குமார், சுவாதி, விஜய் கிருஷ்ணராஜ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வணிக ரீதியாக வெற்றி பெற்ற இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இதில் "பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான்பா கணேசா" என வாலி எழுதிய பாடலை தேவா பாடியிருந்தார். இப்பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. 




  • 2003 ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் இயக்கத்தில் உருவான ‘அன்னை காளிகாம்பாள்’ படம் வெளியானது. இந்த படத்தில் யானை முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும். ரம்யா கிருஷ்ணன், அனு பிரபாகர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்க, தேவா இசையமைத்திருந்தார். “கணே கணே கணேசா” பாடல் இடம் பெற்றிருந்தது. 





    • 2009 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த வில்லு படம் வெளியானது. இந்த படத்தில் விநாயகர் சதுர்த்தி பின்னணியில் நடிகர் விஜய் ஆடும் அறிமுக பாடல் இடம் பெற்றது. 






    • 2014 ஆம் ஆண்டு வேதாளம் படத்தை சிறுத்தை சிவா இயக்க, அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதில் அனிருத் இசையில், ‘வீர விநாயகா’ என்னும் பாடல் இடம் பெற்றிருந்தது.