தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மலையாள சினிமாக்கள் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்கு வரும் சுமாரான படங்களை மலையாள சினிமாவை ஒப்பிட்டு பேசும் வழக்கத்தை நாம் பார்க்கலாம். மலையாள சினிமாவிற்கு தமிழ் ரசிகர்களுக்கு மத்தியில் இருக்கும் வரவேற்பு மலையாள நடிகர்கள் தமிழில் அதிகம் நடிப்பதற்கான சாத்தியங்களை உருவாக்கி இருக்கிறது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்த மலையாள நடிகர்களைப் பார்க்கலாம்.
நிமிஷா சஜயன்
மலையாளத்தில் மாலிக் , தி கிரேட் இந்தியன் கிச்சன் , உள்ளிட்ட படங்களில் நடித்த நிமிஷா சஜயன், இந்த ஆண்டு இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். சித்தார்த் நடித்து வெளியான சித்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அடியெடுத்து வைத்திருக்கும் நிமிஷா சஜயன், ரசிகர்களின் பாராட்டுக்களைக் குவித்துள்ளார். சித்தா படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் மலையரசி என்கிற கதாபாத்திரமும் அதிகளவு கவனம் பெற்றுள்ளது. தற்போது அருண் விஜய் நடித்துள்ள மிஷன் படத்தில் நடித்துள்ளார் நிமிஷா சஜயன்.
வர்மண்
விஷால் நடித்த திமிரு படத்தில் நடித்த விநாயகன் மீண்டும் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காணாமலே போய்விட்டார். மலையாளத்தில் இவர் நடித்துள்ள கம்மாட்டிப்பாடம் படத்தை இன்னும் பார்க்காதவர்கள் உடனே பார்த்துவிடுங்கள். தமிழில் நடிக்க பல்வேறு வாய்ப்புகள் வந்தபோது அதைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்த விநாயகன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கம்பேக் கொடுத்தார். கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் விநாயகன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால்
அதே ஜெயிலர் படத்தில் பத்து நிமிடத்திற்கும் குறைவான நேரம் வந்துவிட்டு போன மோகன்லால் திரையரங்கங்களை அதிர வைத்தது நினைவிருக்கட்டும்.
ஃபகத் ஃபாசில்
மாமன்னன் படத்தில் ஃபகத் ஃபாசில் நடித்த ரத்தினவேலு கதாபாத்திரம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியக் காரணம். ஆனால் ஒரு நடிகராக அவரை பாராட்டாமல், சாதி வெறி பிடித்த அவரது கதாபாத்திரத்தை கொண்டாடிவிட்டார்கள். பாவம் இனி தமிழ் படங்கள் என்றால் நடிக்க கொஞ்சம் யோசிக்கதான் செய்வார்!
மேத்யூ தாமஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸ் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். கும்பளங்கி நைட்ஸ் படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்த மேத்யூ, அப்படியே விஜய்யின் இளம் பருவத்தைப் போல் தோற்றமளித்தது ஆச்சரியம்தான்.
ப்ருத்விராஜ் சுகுமாரன்
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகி இருக்கும் சலார் திரைப்படத்தின் ப்ருத்விராஜின் கதாபாத்திரம் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.