மறைந்த ஹாலிவுட் நடிகர் பால் வாக்கரின் 22 வயது மகளும், மாடலுமான மெடோ வாக்கர் டொமினிகன் குடியரசு நாட்டில் நடிகர் லூயிஸ் தார்ண்டன் ஆலன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த அக்டோபர் 23 அன்று, மெடோ வாக்கர் தனது திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படங்களைத் தனது சமூக வலைத்தளக் கணக்குகளில் பதிவு செய்துள்ளார். 


மணமக்கள் இருவரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இந்தத் திருமண நிகழ்ச்சியில் விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர். மெடோ வாக்கர் பகிர்ந்திருந்த படங்களுள் ஒன்றில், மணப்பெண் கோலத்தில் இருந்த அவரை ஹாலிவுட் நடிகர் வின் டீசல் நடைபாதையின் வழியாக நடந்து, அழைத்துச் சென்றதையும் பகிர்ந்துள்ளார். வழக்கமாக, அமெரிக்கர்களின் பழக்க வழக்கங்களின்படி, திருமண நிகழ்ச்சிகளில் மணப்பெண்ணைப் பெண்ணின் தந்தை பாதையின் வழியாக அழைத்துச் செல்வார். மெடோ வாக்கரின் தந்தை பால் வாக்கர் கடந்த 2013ஆம் ஆண்டு கார் விபத்தில் மரணமடைந்தார். பால் வாக்கர் மரணமடைந்த போது, அவருக்கு வயது 40. `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ திரைப்படங்களின் முதல் 6 பாகங்களில் வின் டீசலுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்து வந்தார் பால் வாக்கர். 



மறைந்த பால் வாக்கருடன் வின் டீசல்


 


மெடோ வாக்கரின் பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக கால் காடர் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் நடிகர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தனர். `வொண்டர் வுமன்’ படத்தின் நாயகியான கால் காடட் மெடோ வாக்கரின் பதிவுக்கு இதய ஈமோஜி பகிர்ந்திருந்தார்.  






தனது திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு படங்களையும், வீடியோக்களையும் மெடோ வாக்கர் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படத்தின் நாயகன் வின் டீசல் மட்டும் தனியாக இல்லாமல், அதே படங்களில் பால் வாக்கருக்கு ஜோடியாக நடித்த ஜோர்டானா ப்ரூஸ்டர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். `நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்’ என மெடோ வாக்கர் தான் பதிவிட்ட படங்களுக்குக் காப்ஷனாகக் குறிப்பிட்டுள்ளார். 



வின் டீசல் - மெடோ வாக்கர்


 


இந்த ஆண்டின் தொடக்கத்தில் `ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ படங்களின் ஒன்பதாவது பாகமான `F9' திரைப்படத்தின் அறிமுக விழாவில் தனது தந்தையைப் பெருமைபடுத்தும் விதமாக மெடோ வாக்கருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் கடந்த ஜூன் மாதம் வெளிவந்தது. அடுத்த பாகங்களில் பால் வாக்கரின் மகள் மெடோ வாக்கர் நடிப்பது குறித்து வின் டீசலிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, `என்னால் எதையும் கணிக்க முடியாது’ என்று பதில் கூறியிருந்தார்.


பால் வாக்கரின் மகளின் திருமணத்தில் அவரின் பொறுப்பை ஏற்று நடந்துகொண்ட வின் டீசலுக்கு ரசிகர்கள் பலர் உருக்கமாகத் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.