ஷார்க் 9 பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் சிவா கில்லாரி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் நடிகர் விமல் லீட் ரோலில் நடித்துள்ள திரைப்படம் 'போகுமிடம் வெகு தூரமில்லை'. மெரி ரிக்கெட்ஸ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் கருணாஸ், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஆகஸ்ட் 23ம் தேதியான நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வாழ்க்கைப் பயணம் என்பது நல்லது கெட்டது என்பதின் கலவையாகவே இருக்கும் என்பதை சென்னை - திருநெல்வேலி செல்லும் பயணத்துக்குள் சொல்ல முற்பட்டுள்ளார் படத்தின் இயக்குநர் மைக்கேல் கே.ராஜா. திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்புள்ளியாக இருக்கும் பெரிய மனிதர் ஒருவர் சென்னையில் இறந்துபோக அவரின் உடலை திருநெல்வேலிக்கு எடுத்து செல்கிறார் விமல். இடையில் லிஃப்ட் கேட்டு ஏறி கொள்கிறார் நடிகர் கருணாஸ். இருவரும் வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்களாக நடித்துள்ளனர்.
விமல் அதிகம் பேசவில்லை என்றாலும் அவருக்கும் சேர்த்து கருணாஸ் பேசிவிடுகிறார்.
விமல் தன்னுடைய இக்கட்டான சூழலால் அழுத்தமான மனநிலையில் படம் முழுக்க ட்ராவல் செய்ய லிஃப்ட் கேட்டு ஏறிய நடிகர் கருணாஸ் தொன தொனவென பேசி கொண்டே அலப்பறை செய்து வந்தாலும் அவருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை. இருவரும் அமரர் ஊர்தியில் பிணத்துடன் பயணம் மேற்கொள்ள இடையில் பிணம் காணாமல் போனதால் சிக்கலில் சிக்கி தவிக்கிறார்கள். பிரச்சனைகளை கடந்து பிணத்தை திருநெல்வேலிக்கு கொண்டு சேர்கிறார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் கதைக்களம்.
இதில் டார்க் காமெடி, எமோஷன், மனித நேயம் என அனைத்தின் கலவையாக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் ட்ரைலர் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானதில் விமலின் எக்ஸ்பிரஷன்கள் பாராட்டுகளை பெற்றது. இப்படத்தில் நிச்சயம் அவரின் நடிப்பு பேசப்படும்.
'போகுமிடம் வெகு தூரமில்லை' திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதியான நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதாவது ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி வாகனங்களின் ஓட்டுனர்கள் அவர்களின் ஐடி கார்டு போட்டோவை கொடுக்கப்பட்டுள்ள ( 9884849790) வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்பி இப்படத்தின் டிக்கெட்டை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சலுகை முதல் மட்டும் என போஸ்டர் மூலம் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சலுகையை ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி ஓட்டுனர்கள் பெற்றுக்கொண்டு பயனடையலாம்.