இந்தியில் வெளியாகி  மிகப்பெரிய வரவேற்பை பெற்ற “12th Fail” படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அப்படத்தின் நடிகர் விக்ரம் மாஸ்ஸி தெரிவித்துள்ளார். 


கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி இந்தியில் வெளியான படம் 12th Fail. இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், அன்ஷுமன் புஷ்கர், அனந்த் விஜய் ஜோஷி, கீதா அகர்வால், ஹரிஷ் கண்ணா, சரிதா ஜோஷி, விகாஸ் திவ்யாகீர்த்தி என பலரும் நடித்துள்ளனர். சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை விது வினோத் சோப்ரா இயக்கியுள்ளார். 


இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் ஐபிஎஸ் அதிகாரியான மனோஜ் குமார் ஷர்மாவின்  வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இதில் மனோஜ் குமார் கேரக்டரில் நடிகர் விக்ரம் மாஸ்ஸி நடித்திருந்தார். மத்தியப்பிரதேச மாநிலம் சம்பல் பள்ளதாக்கில் வசிக்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மனோஜின் தந்தை ஒரு நேர்மையான அதிகாரி. அதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். மேலும் அங்குள்ள பகுதியில் கல்வி என்பது காப்பி அடித்தாவது மாணவர்கள் பாஸ் பண்ண வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கிறது. 


இப்படியான நிலையில் தன் ஊரில் இருந்த காவல்துறை அதிகாரியை முன்மாதிரியாக கொண்டு படிப்புக்காக ஊரை விட்டு வந்து பணத்தை தொலைத்து, பின்னர் டெல்லி சென்று ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்த காட்சிகள் நிச்சயம் தியேட்டரில் படம் பார்த்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இப்படியான நிலையில் தான் “12th Fail” படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், தனது 15 வயதில் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியதாக கூறினார். மேலும் கல்லூரி கட்டணம் செலுத்த தனது தந்தையை சிரமப்படுத்த வேண்டாம் என நினைத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், தான் ஒரு நடனக் கலைஞர் என்று கூறி மேடையில் நடனமாடினார். அதேசமயம் ஆஸ்கார் விருதுக்கு  “12th Fail” படம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 




மேலும் படிக்க:  12th Fail Review: ’கல்வியும் நேர்மையும் தான் மனிதனின் அடையாளம்’ .. உரக்க பேசிய “12th Fail” படம்.. முழு விமர்சனம் இதோ..!