1962 இந்தியா-சீனா போர் நடந்து கொண்டிருந்த சமயம். எல்லையில் துப்பாக்கிகளும், குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்க, அதே ஆண்டு அக்டோபர் 28 ம் தேதி தீபாவளி கொண்டாட தயாராகிக் கொண்டிருந்தது பல பகுதிகள். விடிந்தால் தீபாவளி, அன்றும் திரை மோகம் குறைவில்லாத காலகட்டம் தான். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த முக்கியத் திரைப்படங்கள் வெளியாகின. பரபரப்பான காலகட்டத்தில் வெளியான அத்திரைப்படங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை தவிர்த்து ஒரு விதமான மகிழ்வை ஏற்படுத்தியது என்றும் கூறலாம். 


இதெல்லாம் ஒருபுறமிருக்க, போர் உச்சத்திலிருந்த போது அன்றைய பிரதமர் நேரு, நிவாரணம் வேண்டி கோரிக்கை வைத்தார். அப்போது, ரூ.75 ஆயிரம் வழங்குவதாக எம்.ஜி.ஆர்., அறிவித்தார். அன்று அதன் மதிப்பு பல கோடிகளுக்கு சமம். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் 1962ல் வெளியானது தீபாவளி ரிலீஸ் படங்கள். அவற்றை பற்றி ஒரு பார்வை இதோ...


விக்கிரமாதித்தன்: 



 


எம்.ஜி.ஆர்-பத்மினி நடிப்பில் உருவான திரைப்படம். டி.ஆர்.ரகுநாத், என்.எஸ்.ராமதாஸ் ஆகியோர் இயக்கியிருந்தனர். எஸ்.ராஜேஷ்வரராவ் இசையமைக்க எம்.ஏ.எதிராஜூலு நாயுடு, ஜெயபாரதி புரொடக்ஷன்ஸ் வி.நமச்சிவாயம் ஆகியோர் தயாரித்திருந்தனர். தீபாவளியை முன்னிட்டு எம்.ஜி.ஆர்., ரசிகர்களுக்காக வெளியான திரைப்படம். ராஜ உடை, வாள் வீச்சு, அழகிய தோற்றம் என எம்.ஜி.ஆர்.,யை அவரது ரசிகர்கள் எப்படி ரசிப்பார்களாே, அப்படியே காட்டியிருப்பார்கள். பத்மினியுடன் எம்.ஜி.ஆர்., நடித்த மிகக்குறைந்த படங்களில் இதுவும் ஒன்று. எம்.ஜி.ஆர்., ரசிகர்களை குஷிப்படுத்திய இத்திரைப்படம், தீபாவளி வெளியீட்டில் தன் இருப்பை தக்க வைத்து கொண்டது என்று கூறலாம். 


பந்த பாசம்:



எம்.ஜி.ஆர்., படம் வெளியாகும் போது, அந்த இடத்தில் சிவாஜி படம் எப்படி வெளியாகாமல் இருக்கும்? ஆம், 1962 ம் ஆண்டு தீபாவளி ரேஸில், எம்.ஜி.ஆர்.,யின் விக்ரமாதித்தனுக்கு போட்டியாக களமிறங்கியது சிவாஜியின் பந்தபாசம். ஒருபுறம் எம்.ஜி.ஆர்., வாள் சுழற்றிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் சிவாஜி, பாசப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். பெரியண்ணன் சாந்தி ப்லிம்ஸ் தயாரிப்பில் பிதாமகன் இயக்குனர் என்று போற்றப்படும் ஏ.பீம்சிங் இயக்கத்தில் அன்றைய தினம் வெளியானது பந்தபாசம். 


விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகமாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் சிவாஜியோடு தேவிகா, சாவித்ரி, சந்திரகாந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது ஒரு குடும்பத்திரைப்படமாக போட்டிக்களத்தில் நின்றது. சிவாஜியிடம் அவரது ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை அவர்களுக்கு வழங்கியது பந்தபாசம்.


முத்து மண்டபம்:



எந்த காலகட்டத்திலுமே சூப்பர் ஸ்டார்களோடு போட்டி போட, அல்லது அவர்களை போலவே ஆதரவு பெற்ற நடிகர்கள் இருப்பார்கள். அப்படி, எம்.ஜி.ஆர்.,-சிவாஜி காலத்திலும் லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் திகழ்ந்தார். எப்படி ரஜினி-கமல் படங்கள் வெளியாகும் போது விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, பாக்யராஜ் ஆகியோர் படங்கள் வெளியானதோ, அஜித்-விஜய் படங்களின் போது விக்ரம், சூர்யா ஆகியோரது படங்கள் வெளியானதோ அது போல தான். எஸ்.எஸ்.ஆர்., அனைத்து ஜானர் படங்களிலும் பட்டையை கிளப்புவார். இந்த முறை அவர் இறக்கியது முத்துமண்டபம். ஒரு கிராமப்பின்னணி கொண்ட கதை. அவருக்கானவர்களை திருப்திப்படுத்தியது. தீபாவளி பந்தயத்தில் தனது இருப்பையும் தக்க வைத்துக் கொண்டது முத்துமண்டபம். இந்த படத்தில் அவருடன் விஜயகுமாரி கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்.ஏ.எஸ். சாமி இயக்கியத் இத்திரைப்படத்திற்கு கே.ஜி.ராதாமணாளன் கதை எழுதியிருந்தார். கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தது. 


இந்த மூன்று படங்களுமே, மூன்று ஸ்டார்களின் படமாக 1962 ல் வெளியாகி பொதுமக்களை மகிழ்வித்தன.