பிரபல இயக்குநரான பாலா தனக்கு 25 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி இருக்கிறார்.
நடிகர்கள் விக்ரம் -சூர்யா நடிப்பில் இயக்குநர் பாலா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ பிதாமகன்’. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தை எவர்கிரீன் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் பி.ஏ.துரை என்பவர் தயாரித்திருந்தார்.
அந்த படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் வி.ஏ.துரை பாலாவிடம் தனக்கு மீண்டும் ஒரு படத்தை இயக்கி தருமாறு கேட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அதற்காக 25 லட்சம் ரூபாயையும் முன் தொகையாக கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால் அதன் பின்னர் பாலா மற்றும் வி.ஏ. துரை ஆகிய இருவரும் இணைந்து பணியாற்ற வில்லை.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்கு பிறகு வி.ஏ.துரை தான் கொடுத்த முன் தொகையை திருப்பிக்கொடுக்குமாறு பாலா அலுவலகத்திற்கு சென்று முறையிட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு முறையான பதில் அளிக்க வில்லை என சொல்லப்படுகிறது. இதன் காரணமாக நேற்று ஒரு நாள் முழுவதும் பாலா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளார்.
இரவு 10 மணி ஆன போதும் அவர் அங்கிருந்து கிளம்பவில்லை என்று சொல்லப்படுகிறது. தொடர்ந்து இந்தப்பிரச்னை தயாரிப்பாளர் சங்கத்திற்கு செல்ல, சங்கம் பிரச்னையை முடித்து கொடுப்பதாக வி.ஏ. துரைக்கு உத்திரவாதம் அளித்ததின் பேரில் அவர் பாலா அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார்.