துருவ நட்சத்திரம்


கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. விக்ரம், ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


கெளதம் மேனனின் விடாமுயற்சி


முதலில் சூர்யா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு பின் நடிகர் விக்ரம் இப்படத்தில் நடிக்க முடிவானது. கடந்த 2017ஆம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணச்சிக்கல்களால் கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் கடந்து தற்போது வெளிவர இருக்கிறது. சமீபத்தில் கெளதம் மேனன் தனது நேர்க்காணல் ஒன்றில் எப்படியாவது துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்காக தான், தான் தொடர்ச்சியாக படங்கள் நடித்து வருவதாக தெரிவித்தார். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்தப் படம்.


வரவேற்பைப் பெற்ற ட்ரெய்லர்


சமீபத்தில் வெளியாகிய இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட்டில் மிஷன் இம்பாசிபள் வகைப் படங்களின் கதையைப் போல் இந்தப் படத்த்ன் கதையை உருவாக்கி இருக்கிறார் கெளதம் மேனன். குற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப் படுகிறது 11 பேர்கொண்ட ஒரு குழு. இந்த குழுவின் தலைவனாக இருக்கிறார் ஜான் (விக்ரம்) . தங்களுடைய தலைமை அதிகாரியை கடத்தி வைத்திருக்கும் வில்லனிடம் இருந்து அவரை காப்பாற்றுவது இந்தப் படத்தின் கதையாக இருக்கலாம்.


 


நரச்ச முடி


இதுவரை துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இசைப்புயல் ஏ. ஆர் ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை தாமரை எழுதி ஸ்ரீலேகா பார்த்தசாரதி பாடியுள்ளார்.


கூலான ஒரு லுக்கில் விக்ரம் பாடல் முழுவதும் புன்னகை மட்டுமே சிந்திக் கொண்டிருக்க ரிது வர்மா அவரை பல கோணங்களில் இருந்தும் வளைத்து வளைத்து சைட் அடிக்கிறார். ஹைஃபையாக காட்சிகள்  ஓட ஸ்ரீலேகா பார்த்தசாரதியின் குரல் கிராமத்து குரலில் அமைந்திருப்பது இந்தப் பாடலை அழகாக்குகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய ட்ரேட் மார்க் மெலடியை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார். தமிழ் மற்றுல் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகி இருக்கிறது.