மும்பையில் நடந்த ‘பொன்னியின் செல்வன்’ பிரோமோஷன் நிகழ்ச்சியில், தஞ்சை பெரிய கோயிலின் பெருமையை பற்றி, விக்ரம் பேசிய வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


 






இது குறித்து பேசிய விக்ரம், “ இத்தாலி பீசா நகரில் உள்ள சாய்ந்த கோபுரத்தை நாம் பாராட்டுகிறோம். உண்மையில் அது சாய்ந்து கொண்டே வருகிறது. அதை பார்த்து நாம் பூரிப்படைகிறோம். அதன் அருகில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்துக்கொள்கிறோம். ஆனால் இன்று நம்மிடம் இருக்கும் கோயில்கள் எந்த சிமெண்டையும் கொண்டு கட்டப்படவில்லை. ஆனால் அவை இன்று வரை நேராக நின்று கொண்டிருக்கின்றன. தஞ்சை கோபுரத்தில் உச்சத்தில் உள்ள கல்லை பற்றி உங்களுக்கு தெரியும். 


 






அந்தக்கல்லை அவர்கள் அந்த கோபுரத்தின் உச்சிக்கு கொண்டு போக,  6 கிலோமீட்டர் அளவுக்கு சரிவுப்பாதையை உருவாக்கி, அதில் காளைகள், யானைகள் மற்றும் மனிதர்களின் உதவியோடு அந்தக்கல்லை அங்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த 6 கிலோமீட்டரை கடந்த அந்தக்கல்லை அவர்கள் மேலே கொண்டு செல்ல எந்த இயந்திரத்தையோ, கிரேனையோ  எதையும் பயன்படுத்தவில்லை.


எந்த ஒரு சிமெண்டையும் கொண்டு கட்டப்படாத அந்த கட்டடம் 6 நிலநடுக்கங்களை சந்தித்து இருக்கிறது. என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும்?.. அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றால்,சுற்றுப்புற சுவருக்குள்ளே 6 அடி அளவில் தாழ்வாரம் போன்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அத்துடன் உள்ளே இருந்து மேலே செல்லும் வகையில் மற்றொரு கட்டிட அமைப்பை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். 


 






அதனால்தான் அந்தக்கட்டிடம் இவ்வளவு காலம் தாங்கி நிற்கிறது. சோழர் காலத்தில் 5000 அணைகளை சோழர் கட்டியிருக்கிறார். நீர் மேலாண்மையிலும் அவர் சிறந்து விளங்கி இருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. கிராம புறங்களில் தேர்தல்களை நடத்தி இருக்கிறார். அதே போல மக்களுக்கு அந்தக்காலத்திலேயே கடன்களை வழங்கி இருக்கிறார்.


இவையனைத்தும் 9 ஆம் நூற்றாண்டில் நடந்து இருக்கிறது. அந்த சமயத்தில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க வில்லை. எங்களது கலாச்சாரத்தை பற்றி எண்ணி பாருங்கள். நாங்கள் அப்போது எந்த அளவுக்கு முன்னோக்கி யோசித்து இருக்கிறோம் என்று. நாம் அதை நினைத்து பெருமைபடவேண்டும். இது வட இந்தியா, தென்இந்தியா பற்றியது அல்ல ஒட்டுமொத்த இந்தியா பற்றியது. அதனால் நாம் இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்” என்று பேசினார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.