நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். 






படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக வெளியாகமல் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி சிறிய கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


7 ஆண்டு கால உழைப்பு:


தமிழ் திரையுலலின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கவுதம் மேனன் இயக்கத்தில்,  கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த கதையில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த நிலையில்,  அவர் விலகியதை தொடர்ந்து விக்ரம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.  ஸ்பை திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த 2018ம் ஆண்டு வெளியானது.  ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் ஸ்டைல் காரணமாக அந்த டீசர்  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் “ஒரு மனம்” பாடல் வெளியாகி ரசிகர்களை கட்டிப்போட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமானது. அப்படியே  4 ஆண்டுகள் கடந்த போதிலும் படத்தின் அப்டேட் பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதனால் படம் வெளியாகுமா என்பதே கேள்விக்குறியானது.  


தூசு தட்டப்பட்ட துருவ நட்சத்திரம்:


இந்த நிலையில் தான் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து துருவ நட்சத்திரம் திரைப்படம் தொடர்பான பல்வேறு தகவல்கள் அடுத்தடுத்து வெளிவர தொடங்கின. கவுதம் மேனனின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு, விக்ரம் தனது டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்தார். மற்ற வேலைகளும் துரிதகதியில் நடக்க, பின்னணி இசை சேர்ப்பு பணிகளை தொடங்கிவிட்டதாக ஹாரிஸ் ஜெயராஜும் அறிவித்தார். செவன்  ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ்  துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடும் என கூறப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பும் கைமீறி போனது.


கைகோர்த்த விக்ரம்:


இதனிடையே, பொன்னியின் செல்வன் படங்களுக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. தற்போது நடித்து வரும் தங்கலான் படமும் விஎஃப்எக்ஸ் பணிகள் காரணமாக அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த இடைபட்ட காலத்தை நிரப்பலாம் என்று தான், துருவ நட்சத்திரம் படக்குழுவுடன் சேர்ந்து அதை ரிலீஸ் செய்யும் பணிகளில் விக்ரம் ஈடுபட்டார். அதன் பலனாகவே தற்போது துருவ நட்சத்திரம் படம் நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெற்றி பெற்றால், இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் தயார் என விக்ரம் கூறியுள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 7 ஆண்டுகளுக்கு முந்தைய எழுதப்பட்ட கதையாக இருந்தாலும், இப்போதும் புதியதாக இருப்பது படத்தின் பலம் என துருவநட்சத்திரம் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.