நடிகர் மம்முட்டியை பார்த்துதான் எடுத்துக்கொண்ட சபதம் பற்றி நடிகர் விக்ரம் பேசியிருக்கிறார்.


 ‘பொன்னியின் செல்வன்’ பட பிரோமோஷனுக்காக கேரளா சென்றிருக்கும் விக்ரம் அந்த சுவையான சபதம் பற்றி பகிர்ந்துள்ளார். அந்தப்பதிவில், “ அது 1992- 93 காலக்கட்டம். அப்போது இதில் இருக்கும் பலர் பிறந்திருக்க கூட மாட்டீர்கள். அந்த சமயத்தில் நான்  ‘மீரா’ படத்தை முடித்திருந்தேன். அப்போது எனக்கு அது இராண்டாவது படம். அப்போது இயக்குநர் ஜோஷியின் மேனஜர் ஷண்முகம் இதழில் வந்த எனது புகைப்படத்தை காண்பித்து, ‘துருவம்’ படத்தின் பத்ரன் கேரக்டரில் நடிக்க விருப்பபட்டார். 




அப்போது நான் ஒரு சுமாரான லாட்ஜில் தங்கிருந்தேன். அந்த ஹோட்டலை இன்று கூட எனது குடும்பத்தினருக்கு காண்பித்தேன்.  அப்போது நான் அங்கு நடந்து செல்லும் போது ஒருவருக்கு கூட என்னை அடையாளம் தெரியவில்லை. ஒரு நாள் நான் நடந்து சென்ற போது ஒருவர் என் பெயரை சொல்லி அழைத்து என்னை யார் என்று தெரியும் என்று சொல்லி அங்கிருந்து சென்றார். அவர் பெயரை கூட என்னிடம் சொல்லவில்லை.


நான் எம்.ஜி சாலை வழியாக செல்லும் போது, மம்முட்டி பங்கஜ் ஹோட்டலில் இருப்பதை நான் பார்ப்பேன்.  அதை பார்த்த நான் ஒரு நாள் நிச்சயம் இந்த ஹோட்டலில் நானும் தங்குவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டேன்.  இன்று நான் பங்கஜ் ஹோட்டலில் தங்கவில்லை. ஆனால் அதைவிட நல்ல ஹோட்டலில் தங்கியிருக்கிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.




அந்த சமயத்தில் என்னை அந்த நபர் மட்டுமே அங்கிகரித்தார். ஆனால் இன்று நீங்களெல்லாம் என் பெயரை சொல்லி கத்துகிறீர்கள். இதை விட வேறெதுவும் என்னை சந்தோஷப்படுத்துவதில்லை. மலையாளத்தில் படம் நடித்து மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இருப்பினும் என்னுடைய படங்களை நீங்கள் கொண்டடுகிறீர்கள். அது எனக்கு பிடித்து இருக்கிறது.” என்று பேசியிருக்கிறார்.  


முன்னதாக, கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு இருக்கிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். 


இந்தப்படத்தின் பிரோமோஷனின் ஆரம்பமாக படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து படத்தில் இருந்து போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதனைத்தொடர்ந்து படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. ஆனால் டீசர் ரசிகர்களை  பெரிதாக கவரவில்லை. அதனைத்தொடர்ந்து  'பொன்னி நதி' பாடல் வெளியிடப்பட்டது.  


இந்தப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சோழா சோழா பாடல் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலக ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் படத்தில் நடித்த கலைஞர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர தமிழ் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.