Vikram Press Meet: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பாடல்கள் கடந்த 15ஆம் தேதி வெளியானது. அதற்கு முன்பாக விக்ரம் திரைப்படத்தின் பத்தல பத்தல பாடல் வெளியானது. அதில் மத்திய அரசுக்கு எதிராக வரிகள் எழுதி பாடியிருந்ததாக கமல்ஹாசன் மீது புகார் எழுந்தது.
இந்நிலையில் இன்று விக்ரம் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு விழா நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசன்(Kamal Haasan) மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்(Lokesh Kanagaraj) ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் நடிகர் கமல்ஹாசன் ஒன்றியம் வரிகள் குறித்து பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ் நன்றாக தெரிந்தால் ஒன்றியத்திற்கு பதில் அளிக்க தேவையில்லை. பத்திரிகையாளர்கள் கூடியிருக்கக் கூடிய இந்த அரங்கம் கூட ஒரு ஒன்றியம்தான்” எனக் கூறினார்.
முன்னதாக இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது.
இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியது. அதன்படி, ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசனின் திரைப்படம் வெளிவர உள்ளதால் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்