நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் “இந்தியன்”. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஊழலுக்கு எதிராக போராடும் இந்தியன் தாத்தா ஆக அப்பா கமல் நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதனிடையே பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே 22 ஆண்டுகள் கழித்து கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியானது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல காரணங்களால் தடைபட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா,பஞ்சாபி நடிகர் யோக்ராஜ் சிங் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், ஜி.மாரிமுத்து, ஜெயபிரகாஷ், கிஷோர் ஆகிய 7 பேர் கமலுக்கு வில்லன்களாக நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் 90 வயதுடையவராக நடிக்கும் கமலுக்காக சிறப்பு மேக்கப் போடப்படுகிறது. அதேசமயம் அவர் மனைவியாக நடிக்கும் காஜலின் மேக்கப்பிற்காக மட்டும் கிட்டதட்ட மூன்றரை மணி நேரம் ஆவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தற்போது கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் மற்றும் இந்தியன் 2 படக்குழுவினர் படப்பிடிப்புக்காக தைவான் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த படப்பிடிப்பில் இளம் நடிகர் காளிதாஸ் ஜெயராம் இணைந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் ஷங்கருடன் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக தைவான் சென்ற புகைப்படங்களை கமல்ஹாசனும், ஷங்கரும் பகிர்ந்திருந்தனர். இந்த படம் தீபாவளி வெளியிடாக தியேட்டரில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஏற்கனவே கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான “விக்ரம்” படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் டெய்ரிமில்க் சாக்லேட் விளம்பரம் மூலம் புகழ்பெற்ற காளிதாஸ் 2016 ஆம் ஆண்டு வெளியான மீன் குழம்பும் மண் பானையும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து புத்தம் புது காலை, பாவக்கதைகள், ஒரு பக்க கதை, விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது என பல படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.