தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து இன்றும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமார். அவருக்கு முத்துக்கண்ணு மற்றும் நடிகை மஞ்சுளா என இரு மனைவிகள் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் மனைவிக்கு அனிதா, கவிதா என இரு மகள்களும் அருண் விஜய் என ஒரு மகனும் இருக்க இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என மூன்று மகள்கள். இவர்கள் மூவருமே சினிமாத்துறையில் பிரபலமான நடிகைகளாக இருந்தவர்கள். மகன் அருண் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். 


விஜயகுமாரின் வாரிசுகள் அனைவருக்குமே திருமணம் முடிந்து செட்டிலாகி விட்ட நிலையில் வனிதா மட்டுமே சில சர்ச்சைகளில் சிக்கி  குடும்பத்தில் இருந்து விலகி தனியாக இருக்கிறார். மூத்த மகள் அனிதாவும், கவிதாவும் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டனர். 


 



 


பேத்திக்கு நிச்சயதார்த்தம்:


இப்படியான நிலையில் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கு சமீபத்தில் தான் மிகவும் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தியா வெளிநாட்டில் மருத்துவம் படித்து வருகிறார். மணப்பெண் தனது வருங்கால கணவர் திலனுடன் எடுக்கப்பட்ட ரொமான்டிக் புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  மாப்பிள்ளை குடும்பத்தாரும் புகைப்படங்களில் இருந்தாலும் அவர்கள் யார்? மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. 


அனிதாவின் மகள் தியாவின் நிச்சயதார்த்தத்தில் வனிதாவை தவிர விஜயகுமாரின் ஒட்டுமொத்த குடும்பமும் கலந்து கொண்டது. 
 



விஜயகுமார் திரை பயணம் :


நடிகர் விஜயகுமார் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி  மொழி படங்களிலும் நடித்துள்ளார். 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 1961ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக முருகன்  கதாபாத்திரம் மூலம் அறிமுகமானவர். 'அவள் ஒரு தொடர்கதை'  திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். 80'ஸ் காலகட்டங்களில் ஹீரோக்களின் தந்தையாக, சகோதரனாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.


அக்னி நட்சத்திரம், கிழக்கு சீமையிலே, நாட்டாமை, பாஷா, பாண்டவர் பூமி, அந்தி மந்தாரை என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியான 'மாமன்னன்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு காலகட்டத்தில் வெள்ளித்திரையில் நடிப்பதை குறைத்து கொண்டு சின்னத்திரையில் நடிக்க துவங்கினார். தங்கம், வம்சம், நந்தினி உள்ளிட்ட பல மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.