Vijayakanth Vs Ameer: இன்று அமீருக்கு நடந்தது போல விஜயகாந்த் நடித்த புலன் விசாரணை படத்திலும் பிரச்சனை ஏற்பட்டு இயக்குநர் ஆர்.கே. செல்வமணி ஓரங்கப்பட்டார் என கரு பழனியப்பன் பேசியுள்ளார். 

 

”விஜயகாந்தின் புலன் விசாரணை படத்தை தற்போது பெப்சியின் தலைவராக இருந்த ஆர்.கே. செல்வமணி இயக்கி இருந்தார். அந்த காலத்தில் விஜயகாந்த், ராவுத்தர் பிரபலமடைந்தனர். விஜயகாந்த், ராவுத்தரிடம் புலன் விசாரணை கதையை சொன்ன ஆர்.கே. செல்வமணி படம் தயாரிக்க ஒப்புதல் பெற்றார். 

 

படபிடிப்பு பணிகளும் நடைபெற்றது. நீண்ட காலமாக படப்பிடிப்பு நடந்ததால் செலவும் அதிகரித்தது. ஆக்‌ஷனை சம்பந்தப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால், புலன் விசாரணையில் பாடல் மற்றும் குடும்பம் தொடர்பான காட்சிகள் பெரிதாக இடம்பெறவில்லை. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நடித்து கொடுக்கும் விஜயகாந்த் ஒரு கட்டத்தில் புலன் விசாரணை படம் நீண்ட காலமாக எடுத்து கொண்டிருப்பதால் சோர்வடைந்தார். 

 

அதனால், சாதாரணமான வாய் வார்த்தையாக புலன் விசாரணை படப்பிடிப்பு ஏன் இத்தனை நாட்கள் நடக்கிறது என்று ராவுத்தரிடம் கூறியுள்ளார். இதனால் புலன் விசாரணை படப்பிடிப்பில் ஆர்.கே. செல்வமணிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. பாதிக்கு மேல் படப்பிடிப்பு முடித்திருந்தாலும் விஜய்காந்தின் ஷுட்டிங்குக்கு அதிக நாட்கள் தரமுடியாது என கூறப்பட்டது. இதனால் ஆர்.கே. செல்வமணி நெருக்கடிக்கு ஆளானார்.  கடைசியாக விஜயகாந்த் எப்பொழுது வருகிறாரோ அப்போது தான் படம் ஷுட் செய்யப்பட்டது. இறுதியாக ஒரு நாள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டது. 

 

படம் ஒருவழியாக எடுக்கப்பட்ட பிறகு, செல்வமணியை தயாரிப்பு அலுவலகம் பக்கம் வரவிட வேண்டாம் என்று ராவுத்தர் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை படம் ரிலீசாக இருந்தபோது, வியாழக்கிழமை செல்வமணியிடம் யாருமே பேசாமல் ஒதுங்கினர். அதனால், ஆர்.கே. செல்வமணி மன வருத்தப்பட்டு பேச்சிலர் ரூமில் சென்று இருந்தார். அடுத்தநாள் காலை படம் ரிலீசாகும்போது எந்தவித ஆரவாரமும் இல்லாமல் ஒரு ரசிகனைப்போல்  சென்று படத்தை பார்த்தார். 

 

புலன் விசாரணை திரைக்கு வந்ததும் கன்னியாகுமரி வரை நல்ல வரவேற்பை பெற்றது. அதுவரை முரட்டுத்தனமாக நடித்து வந்த விஜயகாந்தை படித்த, புலன் விசாராணை அதிகாரியாக ஆர்.கே. செல்வமணி காட்டி ரசிகர்களை கொண்டாட வைத்தார். படம் வெற்றிபெற்றதும், ஆளுயர மாலையை வாங்கி சென்ற ராவுத்தர் ஆர்.கே. செல்வமணி கழுத்தில் போட்டு நீ என்னய்யா படம் பண்ணி இருக்க..இப்படி கொண்டாட வச்சிட்டியே...விஜயகாந்தின் 100வது படத்தை நீதான் எடுக்கணும்னு சொன்னார்.

 

அதன்படி விஜயகாந்தின் 100வது படத்தை ஆ.கே. செல்வமணி தான் இயக்கினார். படம் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. 100வது படம் எந்த நடிகருக்கும் பெரிதாக வெற்றிபெறவில்லை. ரஜினி தனது 100வது படமாக ராகவேந்திரா எடுத்தார். அது வசூலில் வெற்றிப்பெறவில்லை. கமல்ஹாசனின் 100வது படமான ராஜபார்வை அப்போது சரியாக ஓடவில்லை. பிரபுவின் ராஜகுமரன் படமும் சரியாக வெற்றிபெறவில்லை. 

 

ஆனால் விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் மாபெரும் வெற்றிப்பெற்றது. அன்றிலிருந்து இன்றைக்கும் வரை விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் என்று அழைக்கப்படுகிறார். ஆரம்பத்தில் ஆர்.கே. செல்வமணி சொல்ல வருவதை சரியாக விஜயகாந்தும், ராவுத்தரும் புரிந்து கொள்ளவில்லை என்றாலும் அவரின் படப்பின் திறமைக்கு மரியாதை கொடுத்த இருவரும் 100வது படத்தை இயக்க வைத்து கவுரவித்தனர். அதுதாங்க ஒரு கலைஞருக்கும், படைப்பாளிக்கும் கொடுக்கும் மரியாதை. அந்த காலத்திலும் பிரச்சனை இருந்தது. அதற்கு விஜயகாந்த் மரியாதை அளித்து பிரச்சனையை அழகாக முடித்து, வெற்றிப்படம் கொடுத்த இயக்குநரை மரியாதை செய்தார். அது போல்தான் பருத்திவீரன் போன்ற ஒரு வெற்றி படத்தை கொடுத்த அமீரை ஞானவேல் ராஜாவோ சூர்யா குடும்பத்தினரோ நடத்துகின்றனரா..?”  என கேள்வி எழுப்பினார்.