இயக்குனரும், இளைய தளபதி விஜய் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில், நடிகர் விஜயகாந்த் மற்றும் நடிகை விஜி நடிப்பில் 1983ம் ஆண்டு வெளியான திரைப்படம் "சாட்சி". இது ஒரு அதிரடி கலந்த காதல் திரைப்படம். ஹரிஹரனின் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார் ஷங்கர் கணேஷ். இப்படம் வெளியாகி இன்றோடு 39 ஆண்டுகள் கடந்துவிட்டன. 


மகனுக்காக பாணியை மாற்றிய இயக்குனர்:


தமிழ் சினிமாவின் ஒரு வித்தியாசமான தனித்துவமான இயக்குனர் எஸ். ஏ. சந்திரசேகர். அவர் எடுத்து வந்த திரைப்படங்கள் பொதுவாகவே குடும்பம், கிரைம், திரில்லர், செண்டிமெண்ட் சம்பந்தமான திரைப்படங்களாகவே இருக்கும். மேலும் அது போன்ற திரைப்படங்களில் சட்டம் எப்படி விளையாடுகிறது என்ற பணியில் தான் பெரும்பாலும் படங்கள் அமைந்து இருக்கும். ஆனால் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மகன் நடிகர் விஜய் படத்தில் நடிக்க துவங்கிய பிறகு இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் படம் எடுக்கும் நோக்கத்தில் தனது பாணியை மாற்றிக்கொண்டு இயக்கிய திரைப்படங்கள் தான் நடிகர் விஜய் நடித்த ரசிகன், விஷ்ணு, தேவா, மாண்புமிகு மாணவன் போன்ற திரைப்படங்கள். 
   


 



நடிகர் விஜயகாந்த் வளர்ச்சியின் முன்னோடி :


எஸ்.ஏ. சந்திரசேகர் - நடிகர் விஜயகாந்த் கூட்டணி ஒரு வெற்றி கூட்டணி. இவர்கள் இருவரும் இணைத்த பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ளன. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு திரைத்துறையில் நுழைந்தவர் நடிகர் விஜயகாந்த். இருப்பினும் தான் அடி எடுத்து வைத்த ஐந்தே ஆண்டுகளில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு முன்னேறியவர் நடிகர் விஜயகாந்த். இவரின் திரை வாழ்க்கை வளர்ச்சியிக்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்ததில் எஸ்.ஏ. சந்திரசேகர் முக்கிய பங்கு வகிக்கிறார். இவர்கள் கூட்டணியில் உருவான "சட்டம் ஒரு இருட்டறை" திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைக்கருவோடு இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி படமானது. அதனை தொடர்ந்து நடிகர் விஜயகாந்த் நடித்த சில படங்கள் சரியாக ஓடாமல் தோல்வி அடைந்தன. அதில் இருந்து மறுபடியும் விஜயகாந்தை மீட்டு  மீண்டும் அடுத்த இன்னிங்ஸிற்கு தயார்படுத்திய பிறகு இவர்கள் கூட்டணியில் 1983ம் ஆண்டு உருவான வெற்றி படம் தான் "சாட்சி" திரைப்படம். 39 ஆண்டுகளுக்கு முன்னர்  இப்படம் வெளியான நாள் இன்று. 


புரட்சி இயக்குனர் :


ஒரு இயக்குனராக சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை மிகவும் நேர்த்தியாக படம் போட்டு காட்டியவர் எஸ். ஏ. சந்திரசேகர். இவர் இயக்குனராக மட்டும் இல்லாமல் சில படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான "மாநாடு" திரைப்படத்தில் நடித்திருந்தார் எஸ்.எஸ்.சி. மேலும் 2018ம் ஆண்டு வெளியான "டிராபிக் ராமசாமி" திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார் எஸ். ஏ. சந்திரசேகர்.  தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு துணிச்சலான புரட்சியை ஏற்படுத்திய இயக்குனர் என்பதால் எஸ்.ஏ. சந்திரசேகர் "புரட்சி இயக்குனர்" என்ற பட்டம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.