நடிகராக, அரசியல்வாதியாக நல்உள்ளம் கொண்ட மனிதராக அறியப்படுபவர் விஜயகாந்த். சமீபத்தில் உடல்நிலை காரணமாக அனைத்திலிருந்து ஒதுங்கி இருக்கும் விஜயகாந்த், அவரது குடும்பத்தார் கண்காணிப்பில் அரசியலை கண்காணித்து வருகிறார். இந்நிலையில், அவரது இளைய மகனும் நடிகருமான சண்முகபாண்டியன், பிரபல இணையதளத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். இதோ அவை...


‛‛அப்பா, தீவிர உழைப்பாளி. அவர் காலை 6 மணிக்கு ஸ்பார்ட்டில் இருக்க வேண்டுமானால், 5:30 மணிக்கெல்லாம் போய்விடுவார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவர் முழு நேரம் சினிமாவில் தீவிரமாக இருந்தார். பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டார். வீட்டிற்கு வந்தால், முதலில் அவர் செய்வது, எங்கள் இருவரையும் அழைத்து விளையாடுவார். 


ஷூட்டிங்கில் இப்படி தான் சண்டை போட்டேன் என்று எங்களை நிற்க வைத்து நடித்து காட்டுவார். ஜாலியா விளையாடுவார். எங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை ஒதுக்குவாரோ, எங்களை முடித்து விட்டு அடுத்ததாக இரு நாய்களை வளர்த்தார். அந்த நாய்களிடம் சென்று அவர்களுடன் பேசி, அரை மணி நேரம் விளையாடுவார். வாக்கிங் அழைத்துச் செல்வார். அதற்கு அப்புறம் தான் இயல்பு நிலைக்கு வருவார்.






சனி, ஞாயிறு ஷூட்டிங் இல்லை என்றால் நாய்களை குளிப்பாட்டுவது, அவற்றிக்கு தேவையான வேலையை செய்வது என பிஸியாக இருப்பார். நாங்கள் நாயை கடையில் குளிக்க அழைத்துச் சென்றால் திட்டுவார். ‛நீங்க தானே குளிக்க வைக்க வேண்டும்’ என்று புத்தி சொல்வார். சீசர், ஜூலி என இரு நாய்களை வைத்திருந்தார். எந்த நாய் வந்தாலும், அந்த இரண்டு பேரு தான். 


நான் 10ம் வகுப்பு படிக்கும் போது, ஜூலி என்ற நாய் இருந்தது. வல்லரசு ஷூட்டிங் மேக்கப் போட்டு கிளம்பினார். அந்த நேரம் ஜூலி இறந்துவிட்டது. அவர் உடைந்து விட்டார். ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டாரு. நானும், அண்ணனும் அழுது கொண்டிருந்தோம். அதை பார்த்து, எங்களை அவர் தேற்றினார். ஆனால், அவருக்கு பயங்கர சோகம். எனக்கு முதலில் ஷவுகத் அலினு தான் பெயர் வைக்க முடிவு வைத்தார்கள். அப்போது, அப்பாவுக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்கள். அதனால் எனக்கு ஷவுகத் அலி என பெயர் வைக்க முடிவு செய்தார்.


அப்போ அங்கே வந்த அரசு அதிகாரிகள், நாளை பாஸ்போர்ட் போன்ற விவகாரங்களில் பிரச்னை வரும் என அவரை சமாதானப்படுத்தி, சண்முகபாண்டியன் என்று வைத்தார்கள். எனக்கு இப்போது, இஸ்லாமிய, கிறிஸ்தவர் பெயர் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என தோன்றும். 


நிறைய ஆங்கிலம் படங்கள் பார்க்கும் போது, அதில் வரும் பெயர்களை பார்க்கும் போது, நமக்கு  இந்த பெயர் இருந்திருக்கலாமே என்று ஆசையாக இருக்கும். விஸ்காம் படிக்க ஆசைப்பட்டேன். அங்கு போகும் போது, ஃவைல்ட் போட்டோகிராபி மீது ஆசை வந்தது. சின்ன வயதிலிருந்தே பொம்மைகள் வைத்து விளையாடுவேன். இதனால், கதை ஆசை இருந்தது. போட்டோக்களை கதையாக அப்பாவிடம் கூறினேன். அவர் உனக்கு திறமை இருக்கு, நடிக்கிறீயா என்று அப்பா கேட்டார். ஓகே சொன்னதால் தான் நான் நடிகனானேன். 


அப்பாவால் நான் சினிமாவுக்கு வந்தேன் என்பார்கள். அப்படியிருந்தால், நான் 10 அல்லது 15 படத்தில் நடித்திருப்பேன். ஆனால், நான் நடித்தது வெறும் 2 படம் தான். முதல் படத்தில் இயக்குனரிடம் பிரச்னை ஆச்சு; அப்புறம் வேறு இயக்குனர் வந்தாரு. இதனால் படம் வெளியே சரியாக வரவில்லை. ஆனால், நான் 100 சதவீதம் உண்மையாக உழைத்தேன். காலை 6 மணிக்கு ஷூட்டிங் என்றால், 5:30 மணிக்கு போய்விடுவேன். அம்மாவும், அப்பாவுடம் என் கூடவே இருந்தாரு. 


‛நீ பொறுமையா போகலாமே..’ என என்னிடம் கூறினார். ‛நீங்க மட்டும் உங்க ஷூட்டிங்க்கு சீக்கிரம் போறீங்க..’ என்றேன். ‛சரிப்பா... சரிப்பா... உன் இஷ்டம்’ என அப்பா கூறிவிட்டார். மாடியில் இருந்து குதிக்கும் ஷூட், அப்பா எனக்கு டூப் போட கூறிக் கொண்டிருந்தார். நான் டூப் இல்லாமல் நடித்துவிட்டேன். ‛ஏண்டா... எடுத்ததும் ரிஸ்க் எடுக்குற’ என அப்பா கூறினார். 


அப்பா கால்களில் நிறைய கட்டு இருக்கும். சண்டை காட்சியில் எரியும் செங்கலை உடைத்து செல்ல வேண்டும். அதில் காலில் சரியான காயம் ஏற்பட்டது. இன்னொரு படத்தில் டம்மி ஹன் வைத்து சுடும் காட்சி. சுடுபவர், சோதனையாக துப்பாக்கியை அழுத்த, அப்பாவின் கண் கீழ் புருவத்தில் அது துளைத்தது. இப்போதும் அந்த இடத்தில் அப்பாவுக்கு எலும்பு இருக்காது. கருப்பு நிலா சூட்டிங்கில் நான், அம்மா, அண்ணன் எல்லோரும் போயிருந்தோம், 


ரோப் இல்லாமல், ஹெலிகாப்டரில் தோங்கிக் கொண்டே சென்றார். நாங்கள் அதை பார்த்தோம். எங்களிடம் வந்தார், ‛பிரேமா... நீ பசங்கள கூட்டிட்டு போ...’ என்றார். எங்களுக்கு தெரியல, நாங்க போய்டோம். குஷ்பூ மேடம் எல்லோரும் பயந்துட்டாங்க. நாங்க வந்த பிறகு எங்களிடம் வந்து எல்லோரும் கவலைப்பட்டாங்க. ‛என்ன மேடம்... நீங்க போய்டீங்க... அவ்வளவு ரிஸ்க்கா அவர் நடிச்சிட்டு இருக்காரு’ என்று சொன்னாங்க, அதுக்கு அப்புறம் தான் அம்மா பயந்தாங்க. அதுக்கு அப்புறம் அப்பா வந்தாரு. ‛எடுத்து முடிச்சாச்சு... ஒன்னும் பிரச்சனை இல்லை... எல்லா ஓகே தான்’ என்றார்,’’
என்று அந்த பேட்டியில் சண்முகபாண்டியன் கூறியுள்ளார்.