எங்கள் அண்ணா, புரட்சிக் கலைஞர், மக்கள் தலைவன் என கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் இழப்பு ஒரு ஈடு செய்ய முடியாத ஒன்றாக ஒட்டுமொத்த தமிழகத்தையுமே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விஜயகாந்த் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது, சவாலானது. மனிதருள் மாணிக்கம் என வார்த்தைக்கு அர்த்தம் தந்தவர் நடிகர் விஜயகாந்த். எண்ணிக்கையில் அடக்க முடியாத அளவுக்கு அவரால் நலம் பெற்றோர் ஏராளம்.
ராசியில்லா நடிகர் :
சிறு வயது முதலே சினிமா மீது அளவுக்கு அதிகமான ஆர்வம் இருந்ததால் படிப்பில்கூட கவனம் செலுத்த முடியாமல் பத்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தியவர். தனக்கு இருக்கும் சினிமா ஆர்வத்தால் சென்னை வந்த அவர் பட்ட அவமானங்கள், ஏளனங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. வாய்ப்பு கிடைத்ததே பெரிய குதிரை கொம்பாக இருந்த சமயத்தில் அவர் வாய்ப்பு கிடைத்து நடித்த படங்கள் தோல்வியடைந்ததால் ‘ராசியில்லா நடிகர்’ என்ற முத்திரை வேறு குத்தப்பட்டார்.
அவரை ஒதுக்கிய அதே சினிமா ஒரு கட்டத்தில் கொண்டாடியது. ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதித்து காட்டினார். இயக்குநர்களின் பேக் கிரவுண்ட் தெரிந்து பின்னர் அவர்கள் படங்களில் நடிக்கும் பழக்கம் இல்லாதவர். கதை பிடித்து இருந்தால் மட்டுமே அப்படத்தை தேர்ந்து எடுப்பார் தவிர அந்த இயக்குநர் எத்தனை வெற்றிப்படங்கள் கொடுத்து இருக்கிறார் என்பதை பற்றி ஒரு நாளும் கணக்கிட்டது கிடையாது.
ஏராளமானோரை அறிமுகப்படுத்தியவர் :
அதற்கு காரணம் ஒரு இயக்குநர் அன்று தனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததால் தானே இன்று அவரால் ஒரு உச்சபட்ச நடிகராகத் திகழ முடிகிறது என்பதை நினைத்து பார்த்தவர். அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் ஏராளமான புதிய இயக்குநர்களை திரைத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதே சமயம் அவர்கள் புதியவர்கள் தான் என்ற காரணத்தினால் அவர்களின் வேலைகளில், திரைக்கதையில் எக்காரணம் கொண்டும் என்றுமே தலையிட்டது கிடையாது. அத்தகைய பண்பாளர் விஜயகாந்த்.
நடிகர் விஜயகாந்த் மனிதர்களிடேயே ஒருபோதும் பாகுபாடு பார்த்தது கிடையாது. இயக்குநர்கள் முதல் தொழிலாளர்கள் வரையில் அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக பழகக் கூடியவர். அதே போல அனைவருக்கும் ஒரே மாதிரியாக உணவளித்தவர்.
தமிழ் சினிமா உலகை பொறுத்தவரையில் இயக்குநர் கே.பாலச்சந்தர் ஏராளமான நடிகர்களை திரைத்துறையில் அறிமுகப்படுத்தி வைத்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போல ஏராளமான இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களை திரைத்துறைக்கு அழைத்து வந்தவர் நடிகர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய், சூர்யா ஆபாவாணன், லிவிங்ஸ்டன், ஆர்.கே.செல்வமணி, சம்பத், பி. வாசு, மன்சூர் அலிகான், கலைமணி, T. சிவா, செந்தில்நாதன், அருண்பாண்டியன், சரத்குமார், மகாராஜன், கசான்கான், மகாராஜன், தேவராஜ் என அவரால் பலன் பெற்ற நடிகர்கள், இயக்குநர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.