மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் (Vijayakanth) தன் மனைவி பிரேமலதா குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நிறம், உருவம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு சாதித்த மனிதர்களில் முதன்மையானவர் விஜயகாந்த். நடிகராகவும், அரசியலில் தேமுதிக தலைவராகவும் சரி அவர் என்றைக்கும் அனைவராலும் நேசிக்க கூடியவராகவே இருந்தார். அப்படிப்பட்ட விஜயகாந்த் தனது 71வது வயதில் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் நேற்று இரவு வரை தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இருந்து பொதுமக்கள் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையை நோக்கி படையெடுத்து வருவதால் பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு விஜயகாந்த் உடல் சென்னை தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் மேல் அவரது உடல் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இப்படியான நிலையில் மனைவி பிரேமலதா பற்றி விஜயகாந்த் பேசிய பழைய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவில், ‘நான் தொழில் ரீதியாகவும், மற்ற ரீதியாகவும் நஷ்டங்கள் வரும்போது கூட நான் கவலைப்படவில்லை. நான் அரசியலுக்கு வரும்போது கல்யாண மண்டபம், கல்லூரி எல்லாம் பாதிக்கப்படும் என சொன்னேன். வருமானவரித்துறையினர் முதற்கொண்டு வருவார்கள் என சொன்னேன். பரவாயில்லை பார்த்து கொள்ளலாம் என பிரேமலதா சொன்னார். அதற்கு காரணம் அவர் கிராமத்தில் இருந்து வந்ததால் அந்த ஒரு எண்ணம் இருந்தது.
மேம்பால பணிக்காக அந்த கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அதற்கு நஷ்ட ஈடா ரூ.8 கோடி கொடுத்தாங்க. ஆனால் அந்த இடத்தோட மதிப்பு ரூ.70 கோடி. எனக்கு ரூ.62 கோடி நஷ்டம். நான் சாதாரண மனிதனாக இருந்த நிலையில் பொதுச்சொத்து போகட்டும் என முதலிலேயே சொல்லி விட்டேன். ஒரு பெண் எப்போதுமே பொருள், பணம் மேல் ஆசை வைத்திருப்பாள் என சொல்வார்கள். ஆனால் இவ்வளவு இழந்தும் பரவாயில்லை என சொல்லி தைரியமாக இருக்கிறார் என்றால் அது தான் என் மனைவி. எல்லா சுக, துக்கங்களிலும் பங்கு பெறுபவர். மனைவி தான் என்றைக்கும் பின்னாடி நிற்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.
கணவர் இறப்பை தாங்க முடியாமல் பிரேமலதா அவரது உடல் வைக்கப்பட்ட இடத்தை விட்டு எங்கேயும் நகராமல் கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்க வைத்தது. அவருக்கு தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: Vijayakanth:மறைந்த அண்ணன் விஜயகாந்த் உடலை காண ஓடோடி வந்த விஜய்.. கண்ணீர் மல்க அஞ்சலி..