தமிழ் சினிமாவின் பொற்காலம் என கொண்டாடப்பட்ட 80ஸ் காலகட்டத்தில் 1986ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஊமை விழிகள்'. அந்த சமயத்தில் கிராமிய கதைகள், காதல், செண்டிமெண்ட் கதைக்களத்தையே பெரும்பாலும் கொண்டு திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வந்தன.
பாரதிராஜா, பாலச்சந்தர், பாக்யராஜ், பாலுமகேந்திரா, டி. ராஜேந்தர் என பல ஜாம்பவான்களும் கொடி கட்டி பறந்த அந்த காலகட்டத்தில், திரைப்பட கல்லூரியில் பட்டம் பெற்ற ஒரு குழுவின் கூட்டணியில் ஆபாவாணன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் தான் 'ஊமை விழிகள்'. அந்த காலகட்டத்திலேயே தொழில்நுட்பத்தை வேறு விதமாக பயன்படுத்தி ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஒரு தமிழ் படத்தை கொடுத்தவர் ஆபாவாணன்.
திரைப்பட கல்லூரியை சேர்ந்தவர் என்றால் தாம் தூம் என குதிப்பார்கள், பந்தா எல்லாம் காட்டுவார்கள் என்ற பொதுவான ஒரு கருத்து இருந்த காலகட்டத்தில் ஒரு திரைப்பட கல்லூரி மாணவனாக எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் ஃப்ரெஷாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்து முதல் படத்தையே ஒரு மாபெரும் வெற்றி படமாக கொடுத்தவர் ஆபாவாணன். அவரை தொடர்ந்து வந்த திரைப்பட கல்லூரி மாணவர்களான ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியை அமைந்தார்.
அதே சமயத்தில் நடிகர் விஜயகாந்த் என்ற மாபெரும் கலைஞனின் வித்தியாசமான பரிணாமத்தை 'ஊமை விழிகள்' திரைப்படம் மூலம் வெளிகொண்டு வந்தவர் ஆபாவாணன் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.
விஜயகாந்த், கார்த்திக், ஜெய்சங்கர், அருண்பாண்டியன், சரிதா, சந்திரசேகர், ஸ்ரீவித்யா, சசிகலா, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த 'ஊமை விழிகள்' திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாக்கி மிக பெரிய ஹிட் கொடுத்து இருந்தார். இப்படம் வெளியாகி 37 ஆண்டுகளை கடந்தாலும் இன்றும் அது பேசப்படும் அளவுக்கு சரித்திரம் படைத்துள்ளது. அப்படத்தை தொடர்ந்து தான் தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் ஜானரில் பல படங்கள் வெளியாக துவங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
ஓரளவுக்கு பிரபலமான நடிகர்களே பெரிய அளவில் பந்தா செய்வதும், இயக்குநர்களின் படைப்பில் தலையிடுவதையும் பார்க்க முடிகிறது. அப்படி இருக்கையில் 'ஊமை விழிகள்' படம் வெளியாவதற்கு முன்னரே ஒரு உச்ச பட்ச நட்சத்திரமாக 'வைதேகி காத்திருந்தாள்' என்ற வெள்ளி விழா கண்ட படங்களில் எல்லாம் நடித்த ஒரு ஸ்டார் நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். ராவுத்தரின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து தான் 'ஊமை விழிகள்' படத்தில் அவர் நடிக்க சம்மதம் சொன்னார் என்றாலும் முதல் நாளில் இருந்தே மிகவும் ஈடுபாடுடன் இருந்தார்.
அதே சமயம் திரைப்பட கல்லூரி மாணவர்களின் முதல் படத்தில் நடிக்கிறோமே என கொஞ்சமும் ஈகோ இல்லாமல் அனைவரையும் சார் என அழைத்து தான் பேசுவாராம் விஜயகாந்த். முதல் தயாரிப்பாளர் முதல் இயக்குநர் என வித்தியாசம் பார்க்காமல் மரியாதையுடன் நடத்தினார். நாட்கள் செல்ல செல்ல அவர் காட்டிய அன்பிற்கு அனைவரையும் அடிமையாகி விட்டார். அது தான் கேப்டன் விஜயகாந்த்.