Vijayakanth: சண்டை காட்சிகளில் விஜயகாந்த் டூப் போடாமல் அவரே பயிற்சி எடுத்து நடித்தது குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 


 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்  நேற்று முன்தினம் காலை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.  முன்னதாக அவரது உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்ட நிலையில் ஏராளமனோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

பின்னர் 4 மணியளவில் தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக  விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கு 72 குண்டுகள் முழங்க முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

 

விஜயகாந்த் மறைந்த நிலையில் அவர் குறித்த பல தகவல்களை திரை பிரலங்கள் நெருங்கிய நண்பர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் திரையில் விஜயகாந்த் டூப் போடாமல் சண்டை செய்த தகவலும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதில், ” நடிகர் விஜயகாந்தின் திரைப்படங்களில் அதிகம் பேசப்படுவது அவரது சண்டைக்காட்சிகளே. பல திரைப்படங்களில் தனக்கு டூப் வேண்டாம் என மறுத்து, சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளில் தனெக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியிருந்தார் விஜயகாந்த.

 


இதற்கு பின்னால் ஒரு முக்கிய சம்பவம் உள்ளது என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். 'நாளை உனது நாள்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த விபத்தில், அவருக்கு டூப் போட்ட ஒரு ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு, இனிமேல் எனக்கான சண்டைக்காட்சிகளில் நானே நடித்துக் கொள்கிறேன், டூப் வேண்டாமென முடிவெடுத்துள்ளார். டூப்புக்கு ரெண்டு உசுரா இருக்கு, அவருக்கு ஒரு உசுருதானே. அது போறதா இருந்தால் என்னோடு போகட்டும், நானே ரிஸ்க் எடுக்கிறேன் என தெரிவித்தாராம். இதற்காக பிரத்யேக சண்டைப் பயிற்சிகளையும் அவர் எடுத்துள்ளார். தனது பெரும்பாலான படங்களில் டூப் போடாமல் நடித்ததால், பலமுறை இவருக்கு தோள்பட்டை இறக்கம் ஏற்பட்டுள்ளது” என்ற தகவல் பகிரப்பட்டு வருகிறது.