தமிழ் சினிமாவின் ஒப்பில்லா நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான மறைந்த கேப்டன் விஜயகாந்த் சாதி, மதம் சார்ந்த கொள்கைகள் மீது அதிகம் ஈடுபாடு இல்லாதவர். எந்த மதமாக இருந்தாலும் சம்மதம் என்ற ஒரு நெறியோடு தான் தனது வாழ்நாள் முழுக்க அவர் வாழ்ந்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு தகவல் என்றாலும், அதையும் தாண்டி கேப்டன் தன்னுடைய இளைய மகனுக்கு இஸ்லாமியர்களின் பெயரை வைத்தது குறித்தும் பின்பு அதை சில காரணங்களுக்காக தான் வேறு வழியில்லாமல் மாற்றினார் என்பதும் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். அந்த நிகழ்வு குறித்த தெளிவான ஒரு விளக்கத்தை விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் கொடுத்துள்ளார். 


 



மகனுக்கு இஸ்லாமிய பெயர் :


கேப்டன் விஜயகாந்த்திற்கு ஏராளமான நெருக்கமான இஸ்லாமிய நண்பர்கள் இருந்துள்ளனர். அதிலும் ராவுத்தர் - விஜயகாந்த் நட்பு குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படியான ஒரு ஆழமான நட்பு அவர்களுக்கு இடையில் இருந்தது நாடு அறிந்த ஒரு விஷயம். அப்படி இருக்கையில் தன்னுடைய இளைய மகனுக்கு சவுக்கத் அலி என்று பெயர் சூட்டியுள்ளார். ராவுத்தரை போலவே விஜயகாந்தின் மற்றொரு நெருங்கிய நண்பரின் பெயர் சவுக்கத் அலி என கூறப்படுகிறது. 


பெயர் சிக்கல் :


மேலும் சாதி மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவர் விஜயகாந்த் என்பதை இந்த நிகழ்வு வலியுறுத்துகிறது. ஆனால் அப்பெயர் சூடும் விழாவின் போது பல அதிகாரிகள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது விஜயகாந்த் மகனுக்கு சவுக்கத் அலி என்ற பெயரை சூட்டினால் பாஸ்போர்ட் மற்றும் பிற அரசு சான்றிதழ்களில் பெயர் அப்படி இருப்பதால் பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு அவர் செல்ல நேரிட்டால் பல சிக்கல்களை சந்திக்க வேண்டி இருக்கும் என கூறியுள்ளனர். இந்து என குறிப்பிட்டுவிட்டு பெயர் மட்டும் இஸ்லாமிய அல்லது வேறு ஒரு மதத்தின் பெயராக இருந்தால் சிக்கல் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். 


 




இதை ஏற்றுக்கொள்ள மறுத்த விஜயகாந்த், எந்த பிரச்சினை வந்தாலும் பார்த்து கொள்ளலாம். இல்லை என்னுடைய மகன் வெளிநாட்டுக்கு போகவில்லை என்றால் கூட பரவாயில்லை என தெரிவித்துள்ளார். உறவினர்களின் எதிர்ப்புகளை கூட அவர் பெரிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. மகனுக்கு பிற்காலத்தில் சிக்கல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக தான் அவர் பலரும் எடுத்து கூறிய பிறகே வேறு வழியில்லாமல் மகனுக்கு சண்முக பாண்டியன் என பெயரிட்டுள்ளார் நடிகர் விஜயகாந்த். 


நட்புக்கு மரியாதை :


நட்பின் மீது எத்தனை மரியாதை கொண்டு இருந்தால் இப்படி ஒரு முடிவை அவர் எடுத்து இருப்பார். அந்த அளவுக்கு இஸ்லாமியர் மீது நட்புடனும் தோழமையுடன் பழகியவர் விஜயகாந்த். இஸ்லாமியர்களோடு மட்டுமல்லாமல் கிறிஸ்தவ மதத்தினர் மீதும் எந்த ஒரு பாகுபாடும் இன்றி பழகியவர் விஜயகாந்த்.