தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா நடிகராக புரட்சிக் கலைஞன், கருப்பு எம்.ஜி.ஆர், கருப்பு தங்கம், கேப்டன் என்ற பல பெயர்களுடன் கொண்டாடப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். திரைத்துறையில் மட்டும் தனது தனித்துவத்தை நிரூபிக்காமல் அரசியலிலும் குதித்து தேமுதிக என்ற தனிக்கட்சியை துவங்கி மக்களுக்கு பல நல பணிகளை செய்தவர் கேப்டன் விஜயகாந்த். 


 



ஈடுசெய்ய முடியாத இழப்பு : 


ஒரு நடிகராக திரை ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு, ஒரு தலைவராக இருந்து மக்களை வழிநடத்தி ஒரு மாமனிதராக வாழ்ந்த விஜயகாந்த், உடல்நலக்குறைவால் நேற்று (டிசம்பர் 28) காலமானார். அவரின் ஈடுசெய்ய முடியாத இழப்பு திரைத்துறையினர், ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தோல்வியில் இருந்து வெற்றி : 


1979ம் ஆண்டு வெளியான 'இனிக்கும் இளமை' படத்தில் ஒரு நெகடிவ் கதாபாத்திரமாக தான் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அகல் விளக்கு, நீரோட்டம், சாமந்தி பூ என தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவின. 1980ம் ஆண்டு வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள், வைகேகி காத்திருந்தாள், ஊமை விழிகள் என்ற தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வந்தார். அதற்கு பிறகு அவர் திரை பயணம் ஏறுமுகமாக இருத்தது.


 



மகன் படத்தில் விஜயகாந்த் :


154 படங்களில் நடித்த நடிகர் விஜயகாந்த் தன்னுடைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகமான 'சகாப்தம்' திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டு அருண் பொன்னம்பலம் இயக்கத்தில், சண்முக பாண்டியன் அடுத்த படமான 'தமிழன் என்று சொல்' படத்தில் இறுதியாக இணைந்து நடித்தார். ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜயகாந்த் அனல் தெரிக்க வசனம் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


 






 


தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்த நடிகர் விஜயகாந்த் டாப் 20 தமிழ் நடிகர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரியவர். விஜயகாந்த் நடித்த 100ஆவது திரைப்படம் 'கேப்டன் பிரபாகரன்'. இப்படத்திற்கு பிறகு தான் அவர் கேப்டன் என அனைவராலும் கொண்டாடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.