Vijayakanth: கேப்டன் விஜயகாந்திற்காக எனது உடலுறுப்புகளை தானமாக வழங்க தயாராக உள்ளேன் என குவைத்தில் இருக்கும் ரசிகர் ஒருவர் உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனையில் விஜயகாந்த்:
உடல்நல பாதிப்பால் கடந்த 18ம் தேதி கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அவரால் மூச்சு விட முடியவில்லை என்று மருத்துவமனை அறிக்கை கூறுகிறது.
விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கும் மியாட் மருத்துவமனை, விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என அறிக்கை வெளியிட்டிருந்தது. விஜயகாந்திற்கு தொடர்ந்து நுரையீரல் பாதிப்புக்கான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதால் அவர் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கண்ணீரில் ரசிகர்கள்:
விஜயகாந்தின் உடல்நிலை மேலும் மோசமானதாக இன்று பிற்பகல் தகவல் வெளியான நிலையில் மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு ரசிகர்கள் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே விஜயகாந்திற்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில் டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குவைத்தில் இருக்கும் ரசிகர் ஒருவர் விஜயகாந்திற்கு உடலுறுப்பு தானமாக வழங்க தயாராக இருப்பதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
உடல் உறுப்பைத் தர தயார்:
அதில், “ நான் நியூஸ் பார்த்தேன். விஜயகாந்திற்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என் தலைவனுக்கு ஏதாவது உறுப்புகள் தேவைப்பட்டால், அதை மாற்ற வேண்டும் என்றால் எனது கல்லீரல், நுரையீரல், என எந்த ஒரு உறுப்பு வேண்டுமானாலும் நான் தருகிறேன். நான் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவன். அவருக்கு ஏதாவது தேவைப்பட்டால் நான் இங்கிருந்து உடனடியாக வருகிறேன். எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் நான் வருகிறேன்” என உருக்கமாக பேசியுள்ளார்.